பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடில நாடு

119


என்னும் பெரிய புராணப் பாடல் பகுதியால் அறியலாம். சேதிநாடு திருமுனைப்பாடி நாட்டின் ஓர் உட்பகுதியாக இருக்கலாம்.

மகதநாடு

திருக்கோவலூர் வட்டாரத்திலுள்ள ஆற்றுார் அல்லது ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு வாணர் என்னும் குறுநில மன்னர் மரபினர் ஆண்ட பகுதி ‘மகத நாடு’ என அழைக்கப்பட்டது. மகத நாட்டையாண்ட மன்னர்கள் ‘மகதேசர்’ என அழைக்கப்பட்டனர். மகத+ஈசர் = மகதேசர். அதாவது, மகதநாட்டின் தலைவர். இச்செய்தியை, ஏகம்ப வாணன் என்னும் வாண மன்னனைப் பற்றிப் பெருந்தொகை என்னும் நூலின் 1192ஆம் பாடலிலுள்ள

"மகதேசன் ஆறைநகர் காவலன் வாண பூபதி”

என்னும் பகுதியாலும், திருவண்ணாமலைக் கோயிலில் வாணவ கோவரையன் என்னும் வாண மன்னனைப் பற்றிய கல்வெட்டொன்றிலுள்ள

“ஆறகளுர் உடையான் மகதேசன் உலகம் காத்த
வாணவ கோவரையன்”

என்னும் பகுதியாலும் திருவயிந்திரபுரம் கல்வெட்டொன்றிலுள்ள ’மகதராஜ்ய நிர்ம்மூலமாடி’ என்னும் பகுதியாலும் பிறவற்றாலும் அறியலாம்.

சனநாத நாடு

இந்நாட்டிற்கு, ’சனநாத நாடு’ என்னும் பெயரும் ஒருகால் ஒரு சிலரால் வழங்கப்பட்டமையை, திருக்கோவலூர் திருவிக்கிரமப் பெருமாள் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்களில் உள்ள,

“ஜநனாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்து
பிரம்மதேயம் திருக்கோவலூர் ஆன பூரீ மதுராந்தக
சதுர்வேதி மங்கலத்து திருவிடைகழி ஆழ்வார்க்கு
இவ் ஊர் சபையோம் விற்றுக் குடுத்த நிலமாவது....”
“மிலாடாகிய ஜனனாத வளநாட்டுக் குறுக்கைக்
கூற்றத்து திருக்கோவலூர்”

என்னும் பகுதிகளால் அறியலாம்.