பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

கெடிலக்கரை நாகரிகம்


திருமுனைப்பாடி நாடும் ஒன்று என்பதுதான் இங்கே சொல்ல வந்த கருத்து. இதற்குத் தக்க சான்றுகள் இல்லாமற் போகவில்லை.

உலகில் முதல்முதல் தமிழகத்திலேயே மக்கள் தோன்றியதாகச் சொல்லப்படும் ஆராய்ச்சி ஒருபுறம் இருக்க, - ஐயனாரிதனார் புறப்பொருள் வெண்பாமாலையில்,

[1] "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி

எனக் கூறியிருப்பது ஒருபுறம் இருக்க

[2]"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரித லின்று”

என்னும் திருக்குறள் உரையில்,

'பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற
குடியின்கட் பிறந்தார்; தொன்று தொட்டு வருதல் - சேர
சோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலம்
தொடங்கி மேம்பட்டு வருதல்’

எனப் பரிமேலழகர் பொருள் எழுதி யிருப்பது ஒருபுறம் இருக்க, கெடிலக்கரையில் மரக் கற்கள் காணப்பட்டிருப்பதாலும், கெடிலம் கடலோடு கலக்குமிடத்தில் கழிமுகத் தீவுகள் ஏற்பட்டிருத்தலாலும் கெடிலம் பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்பே தோன்றி யிருக்கவேண்டும் என ஆராய்ந்து முன்னர்த் (பக்கம் - 93, 94} தெரிவித்துள்ள செய்தி ஈண்டு மிகவும் இன்றியமையாதது.

கெடிலமும் அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதியும் நூறாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றியிருந்தால் போதுமா? அங்கே மக்கள் வாழ்க்கையும் அரசாட்சியும் நாகரிகமும் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியிருந்தால் தானே, அந்தப் பகுதியைப் பழமையான நாடு என்று கூற முடியும்? உலகின் எல்லாப் பகுதிகளுந்தான் நூறாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் தோன்றின. தோன்றியும், பல பகுதிகள் மக்கள் வாழ்க்கையற்றுக் கிடந்தன - இன்னும் சில கிடக்கின்றன. உலகின் தலைசிறந்த நாடுகளாக இன்று மதிக்கப்படும் இங்கிலாந்தையும்


  1. புறப்பொருள் வெண்பாமாலை - கரந்தைப் படலம் - 14.
  2. திருக்குறள் - பொருட்பால் - குடிமை : 5.