பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலநாட்டு வரலாறு

125


இழுத்துக் கொண்டு வரப்படுகிறது. முந்தி என்கின்றனர் சிலர்; பிந்தி என்கின்றனர் சிலர். சங்க காலம் என்பது, மதுரையில் பாண்டிய மன்னர்கள் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த காலத்தைக் குறிக்கும். அங்கே மூன்று முறை மூன்று சங்கங்கள் தோன்றி மறைந்தனவாம். இங்கே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கடைச் சங்கம் என்பது மூன்றாம் சங்கமாகும். இதற்கும் பல நூற்றாண்டுகட்குமுன் இடைச் சங்கம் எனப்படும் இரண்டாம் சங்கம் இருந்ததாம். அதற்கும் பல நூற்றாண்டுகட்கு முன் முதற் சங்கம் இருந்ததாம். அங்ஙனமெனில், ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழகம் சிறந்த இலக்கிய இலக்கணக் கலைச் செல்வங்களுடன், மிக்க வளர்ச்சியும் நாகரிகமும் பெற்றிருந்தமை புலனாகும்.

தமிழகம் முப்பெருஞ் சங்கங்களைப் பெற்றிருந்தும் தீவினைப்பயனால் முதற் சங்க நால்களும் இடைச் சங்க நூல்களும் கிடைக்கவில்லை; கடைச்சங்க நூல்கள் சில மட்டும் கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டுதான் திருமுனைப் பாடிநாடு உட்படத் தமிழகத்தின் வரலாற்றினை ஓரளவு தெரிந்து கொள்ள முடியும். இந்தக் கடைச் சங்க காலம் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது என ஒரு முடிவுக்கு வரலாம். எனவேதான், தமிழக வரலாற்றுத் தொடக்க காலம் கடைச் சங்க காலம் எனக் கூறப்பட்டது.

சோழப் பேரரசு

இலக்கியங்களின் துணைகொண்டு வரலாற்றுக்கு எட்டியுள்ள வரைக்கும், தொடக்க காலத்தில் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டவர்களாக அறியப்படுபவர்கள் சோழ மரபினராவர். கி.மு. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டி லிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப் பகுதி வரை - அதாவது - கி.பி. 250’ வரை, சோழப் பேரரசர்கள் சோழ நாட்டுடன், திருமுனைப்பாடி நாடு எனப்படும் நடுநாடு, தொண்டைநாடு ஆகியவற்றையும் இணைத்துத் தம் தலைமையின் கீழ் ஆண்டு வந்தனர். இவர்களுள், கி.மு. முதல் நூற்றாண்டில் ஆட்சி தொடங்கியவளாகக் கருதப்படும் கரிகாற் சோழன் மிகவும் இன்றியமையாதவன். ஆட்சிச் சிறப்பில் இவனுக்கு அடுத்த பங்குடையவனாயிருந்தவன் நெடுமுடிக் கிள்ளியாவான். சோழர்கள் நாட்டைப் பல கோட்டங்களாகப் பிரித்து, ஆங்காங்குத் தம் ஆணையரை அமர்த்தி, காடு திருத்தியும் நீர்ப்பாசன வசதி செய்தும் நன்கு மேற்பார்வையிட்டு ஆண்டு வந்தனர்.