பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

கெடிலக்கரை நாகரிகம்


மலையமான் மரபினர்

சோழரின் மேலாட்சி இருக்க, கி.பி. முதல் மூன்று நூற்றாண்டு கால அளவில், மலையமான் என்னும் மரபைச் சேர்ந்த குறுநில மன்னர்கள் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்தார்கள் அப்போது இந்நாட்டிற்கு ‘மலாடு’ என்பது பெயர். இவர்கள் பெரும்பாலும் சோழர்க்குக் கட்டுப்பட்டே ஆண்டு வந்தனர்; அதே நேரத்தில் மற்ற மன்னர்களுடன் நட்புறவு கொண்டு நடுநிலையாளராகவும் விளங்கி வந்தனர். இவர்களுள், மலையமான் திருமுடிக்காரி, மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்னும் இருவரும் இன்றியமையாதவர்கள். மலையமான் மரபினருள், திருமுடிக்காரி மற்றவரினும் ஓரளவு தன்னுரிமை (சுதந்திரம்) உடையவனாயிருந்ததாகத் தெரிகிறது. திருக்கண்ணனோ முழுக்க முழுக்கச் சோழரைச் சார்ந்து வாழ்ந்தவனாகத் தெரிகிறது.

பல்லவப் பேரரசு

மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் (கி.பி. 250-க்கு மேல்) தொண்டை நாடு சோழர்களிடமிருந்து பல்லவ மன்னர் கைக்கு மாறியது; திருமுனைப்பாடி நாடு அதாவது - தென்பெண்ணைக்கு வடக்கேயுள்ள பகுதி அப்போதும் சோழர்களிடமே இருந்தது; ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து திருமுனைப்பாடி நாடும் பல்லவர் பேரரசின் கைக்குச் சென்று விட்டது. இந்நாட்டை ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் பல்லவப் பேரரசர்களே ஆட்சி புரிந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ‘அபராசிதன்’ என்னும் வலிமையற்ற பல்லவ மன்னன் ஆண்டான், அவனோடு பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. மீண்டும் சோழர் ஆட்சி தலை தூக்கியது.

பல்லவப் பேரரசின் ஆட்சியில் சமண மதம் தழைத்திருந்தது. திருநாவுக்கரசர் தோன்றி, ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மன்னனையும் (முதல் மகேந்திரவர்மன்) மக்களையும் மீண்டும் சைவத்திற்கு மாற்றினார்; பல்லவ மன்னர்கள் தங்கள் காலத்தில் நாட்டில் கலைவளமும் பொருள் வளமும் கொழிக்க நன்றாக ஆட்சி புரிந்தனர்.

கல்வெட்டுக்களின் துணைகொண்டும் இலக்கியங்களின் துணைகொண்டும் ஆராய்ந்து அறிந்துள்ள வரைக்கும், நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை, தொண்டை நாட்டுடன் திருமுனைப்பாடி நாட்டையும்