பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலநாட்டு வரலாறு

129


காலம் ஆண்டனர். அழிந்து போன பல்லவப் பேரரசின் வழிவந்தவர்களே காடவராயர் எனப்படுபவர். சங்க காலச் சோழரின் கீழ் மலையமான் மரபினர் சிற்றரசர்களாய் ஆண்டது போல, பிற்காலச் சோழர்களின் கீழ், பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர்கள் குறுநில மன்னர்களாயும் சோழ ஆணையர்களாயும் ஆண்டு வந்தனர்.

12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திருமுனைப்பாடி நாட்டில், கெடிலக்கரையிலுள்ள திருமாணிகுழிப் பகுதியில் வளந்தானார் என்ற காடவர் சோழரின் கீழ் ஆட்சி புரிந்தார். இவர் வழிவந்தவருள் கோப்பெருஞ்சிங்கன் என்பவன் மிகவும் குறிப்பிடத்தக்கவன், இவன், கெடிலக்கரையிலுள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு 1243 முதல் 1279 வரை திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி புரிந்தான். இவனோடு காடவராய மரபினராட்சி ஒரு சேரச் சோழராட்சியுடன் 1279ஆம் ஆண்டளவில் பாண்டியரால் வீழ்த்தப்பட்டது.

பாண்டியப் பேரரசு

திருமுனைப்பாடி நாடு சோழர் தலைமைக்கு உட்பட்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனது ஆட்சிக்குப் பின் பாண்டியப் பேரரசின் கைக்கு மாறியது. இவ்வாறு மாற்றிய வெற்றியில் முறையே இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1239-1251), முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1270), முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268-1311) ஆகியோர்க்கு மிக்க பங்கு உண்டு. பாண்டியர் ஆட்சி முக்கால் நூற்றாண்டுக்கால அளவு நடைபெற்றது. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் பாண்டியர் காலமாகும்.


பதினான்காம் நூற்றாண்டில் பல்வேறு
அரசர்கள்

போசளர்

பதினான்காம் நூற்றாண்டின் முற்பாதியில் தென்னார்க்காடு மாவட்டத்தில் பாண்டியப் பேரரசின் மேலாட்சி பெரும்பாலான இடங்களில் இருந்தது ஒருபுறம் இருக்க, மாவட்டத்தின் மூலைக்குமூலை சிற்சில பகுதிகளில் பலவேறு அரசர்கள் ஆணை செலுத்தியதாகத் தெரிகிறது. சிலவிடங்களில், மைசூர் நாட்டைச் சேர்ந்த ‘ஓய்சாளர்’ அல்லது ‘போசளர்’ எனப்படும் மரபினரின் ஆட்சி நிலவியது. பதின்மூன்றாம்

கெ .9.