பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

கெடிலக்கரை நாகரிகம்


நூற்றாண்டின் பிற்பாதியிலேயே போசள மரபினர் தென்னார்க்காடு மாவட்டத்தில் தம் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அப்போது, திருக்கோவலூர் வட்டத்தில் கெடிலக் கரையில் உள்ள சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கோப்பெருஞ் சிங்கக் காடவராயனுக்கு உரியதாயிருந்த கடலூர்த் துறைமுகத்தை, வீரநரசிம்மன் என்னும் போசள மன்னன் தாக்கியிடித் தழித்தான், இப்படியாகப் போசளரின் ஆதிக்கம் 1340 வரை சில வட்டாரங்களில் இருந்தது.

சேரர்

மற்றும், திருவதிகைக் கோயில் கல்வெட்டின் துணை கொண்டு, 1313 தொடங்கி 1327 வரையும் குலசேகரன் என்னும் சேர வேந்தன் கடலூர் வட்டாரத்தை அரசாண்டதாக ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

உடையார்கள்

மேலும், உடையார்கள் என்னும் மரபைச் சேர்ந்த சிற்றரசர்களும் 14ஆம் நூற்றாண்டில் தென்னார்க்காடு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆணை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் பாண்டியப் பேரரசின் மேலாட்சியும் இம்மாவட்டத்தில் நடைபெற்றிருந்தது.

மதுரை சுல்தான்

பாண்டியரைத் தொடர்ந்து மதுரை சுல்தான் மாலிக் கபூர் 1334 முதல் 1378 வரை 45 ஆண்டு காலம் திருமுனைப்பாடி நாட்டை அரசு செலுத்தினார். பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (கி.பி. 1310) வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் தன் பங்காளிப் பாண்டியரை வெல்வதற்காக வடக்கேயிருந்த முசுலீம் மன்னரின் உதவியை நாடியதால், தென்னாட்டில் - மதுரையில் முசுலீம் ஆட்சி எளிதில் ஏற்பட வழி உண்டாயிற்று.

விசயநகரப் பேரரசு

பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை (1378 - 1645) திருமுனைப்பாடி நாடு விசய நகரப் பேரரசின் கீழ் இருந்தது. தங்கள் மேற்பார்வையில் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட விசயநகர மன்னர்களுள், குமார கம்பனா (1343 முதல்), கிருஷ்ண தேவராயர் (1509 - 1529), இரண்டாம் சீரங்கன் (1614 முதல்), மூன்றாம் வேங்கடன் {1642 முடிவு) முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.