பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

கெடிலக்கரை நாகரிகம்


தென்னார்க்காடு மாவட்டத்தைத் தாக்கினார்; பிரெஞ்சுக்காரரின் உதவியுடன் கடலூரைப் பிடிக்க முயன்றார்; முடியவில்லை. ஆங்கிலேயர்கள் ஐதர் அலியை ஒடுக்கிவிட்டனர். 1782இல் ஐதர் அலி இறந்ததும், அவர் மகன் திப்பு சுல்தான் மைசூர் அரசரானார். அவரும் தந்தையின் வழியைப் பின்பற்றிப் போர் தொடுத்தார். அவரையும் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். 1799இல் திப்பு இறந்தார்.

இவ்வாறு, சந்தா சாகிப், முசாபர் ஜங், பிரெஞ்சுக்காரர்கள், மைசூர் முசுலீம் மன்னர்கள் முதலியோரின் போட்டிப் பொறாமைப் பூசல்களுக்கிடையே, ஆங்கிலேயரின் துணை வலிமையால் முகமது அலி 1748 முதல் 1795வரை கர்நாடக நவாப்பாக ஆட்சி புரிந்தார். அவருக்குப் பின் அவர் மகன் ‘உமதத் - உல் - உமர்’ என்பவர் 1795 தொட்டு 1801 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.

இவ்வாறாகத் தென்னார்க்காடு மாவட்டம், 1698 முதல் 1801 வரை - அதாவது பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் - ஒளரங்கசீப்பின் ஆட்சி வழிவந்த மொகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. இந்தக் காலத்தில் தான், மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் ஒருவர்க்கொருவர் நட்பாகவும் பகையாகவும் இருந்து கலந்து கொண்ட வரலாற்றுப் பெயர் பெற்ற ‘மூன்று கருநாடகப் போர்கள்’ நிகழ்ந்தன. இப்போர்களில் பெரும்பாலும் தென்னார்க்காடு மாவட்டமே மையமாக இருந்து பெரும்பங்கு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, இந்த ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தில் புரிந்த திருவிளையாடல்களை ஒரு சிறிது சுருக்கமாக நோக்குவோம்:

ஐரோப்பியர்கள்

திறந்து கிடந்த நாட்டில் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பியர்களும் நுழைந்து விளையாடத் தொடங்கி விட்டார்கள். பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் நம் நாட்டின் உடைமைக்காகத் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதன்றி, மொகலாய மன்னர்களுக்குள்ளும் இந்து மன்னர்களுக்குள்ளும் சிண்டு முடிந்து விட்டும் கலகத்துக்கு வத்தி வைத்தும் நாடு பிடிக்கும் தம் குறிக்கோளை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு வந்தனர். இந்தப் போட்டியில் டச்சுக்காரரையும் போர்ச்சுகேசியரையும்விட ஆங்கிலேயரும்