பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

145


உரையாசிரியரும் புதிய உரையாசிரியரும் பொருள் எழுதியிருப்பதாக முன்னர்க் கூறப்பட்டது. இந்தப் பொருளின்படி பார்த்தால், திருமுடிக்காரியின் மைந்தன் திருக்கண்ணன் என்ற கருத்து கிடைக்கிறது. ஆனால், இது பொருந்தாது; அஃதாவது, ‘நும்முன்’ என்பதற்கு ‘நும் தந்தை’ என உரையாசிரியர்கள் கூறியிருக்கும் பொருள் பொருந்தாது. உண்மையில் தந்தை என்று குறிப்பிட்டிருக்க வேண்டுமென்றால் ‘நுந்தை’ என்னும் சொல்லைப் பெய்திருப்பார் புலவர். அங்ஙனமின்றி, ‘நுமக்கு முன் பிறந்த அண்ணன்’ என்னும் பொருளிலேயே புலவர் ‘நும்முன்’ எனக் கூறியுள்ளார். ‘முன்’ என்னும் சொல், முன் பிறந்த அண்ணன் என்ற பொருளிலேயே ஆன்றோர்களால் ஆளப்பட்டுள்ளது. பெரும்பற்றப் புலியூர் நம்பி என்னும் புலவர் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில், விநாயகர் ஆறு முகங்களையுடைய முருகனுடைய அண்ணன் என்னும் பொருளில்

*அறுமுகேசன் முன்"[1]

எனப் பாடியுள்ளார். இங்கே ‘முன்’ என்னும் சொல்லுக்கு, முன் பிறந்த அண்ணன் என்பது பொருள், முன் என்றால் முன் தோன்றிய அண்ணன் என்று பொருள் விளக்குவார் போன்று புகழேந்திப் புலவர்,

“பாண்டவரின் முன்தோன்றல் பார் முழுதும் தோற்று"[2]

என்று நளவெண்பாவில் பாடியுள்ளார். பாண்டவரின் முன்தோன்றல் என்றால், பாண்டவர்களுக்கு முன் பிறந்த அண்ணனாகிய தருமன், என்பது பொருள், திருமங்கையாழ்வாரும் திவ்வியப் பிரபந்தத்தில்,

"தன்னுடைய முன்தோன்றல் கொண்டேக"[3]

என அண்ணன் என்னும் பொருளில் பாடியுள்ளார்.

இன்னும் தெளிவான சான்று வேண்டுமானால் கம்பராமாயணத்துக்குச் செல்லலாம். காட்டிலிருந்து இராமனை நாட்டிற்கு அழைத்துவரச் சென்ற பர தன கங்கைக் கரையில் குகனை நோக்கி, ‘நம் அண்ணன் இராமன் இங்கே தங்கியிருந்த இடத்தைக் காட்டுக’ என்று கேட்டான். இந்தச் செய்தியை அறிவிக்கும் கம்பராமாயணப் பாடல் பகுதி,


  1. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் - காப்பு - 2.
  2. நளவெண்பா - சுயம்வர காண்டம் - 1.
  3. திவ்வியப் பிரபந்தம் - இயற்பா - பெரிய திருமடல் - 53.

கெ.10.