பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

147


வேண்டா எனக் கிள்ளிவளவனுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது நிற்க, பரணர் என்னும் புலவர் மலையமானை ஒரு (நற்றிணை - 100) பாடலிலும், அதியமான் நெடுமான் அஞ்சியை ஒரு (அகநானூறு - 372) பாடலிலும் பாடியுள்ளார். இதிலிருந்து மலையமான் திருமுடிக்காரி காலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சி வாழ்ந்துள்ளான் என்பதும் புலனாகும். அதியமான் நெடுமான் அஞ்சி திருக்கோவலூரை வென்றதாக ஒளவையார் (புறம் : 99) பாடியிருப்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது.

இதுவரையும் எடுத்து காட்டியுள்ள சங்க நூற்பாடல்களை அடிப்படையாக வைத்து ஆராயுங்கால், பின்வரும் செய்திகள் புலனாகலாம்:

“தன் நண்பன் ஓரியைக் காரி கொன்றதைப் பொறாத அதியமான் அஞ்சி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனோடு சேர்ந்துகொண்டு மலையமான் திருமுடிக் காரியை எதிர்த்து வெற்றிபெற்றிருக்கிறான். அவன் திருக்கோவலூரை அழித்ததாகப் பொதுப்படையில் ஒளவையார் குறிப்பிட்டிருப்பது இந்த வெற்றியாகத்தான் இருக்க வேண்டும். இந்தப் போரில் திருமுடிக்காரி செத்தே போனான். அவனுடைய இளஞ்சிறார்களைக் கிள்ளிவளவன் கொல்ல முயன்றான். கோவூர் கிழார் தடுத்துக் காத்தார். திருமுடிக்காரியின் மக்கள் இளஞ்சிறாராயிருந்ததனால், அவன் தம்பி மலையமான் திருக்கண்ணன் சோழரது நட்பைப் பெற்று அவர்தம் தலைமையின் கீழ்க் கோவலூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்” இவ்வாறு நடந்திருக்கலாம். எனவே, திருமுடிக்காரியின் தம்பி திருக்கண்ணன் என்ற கருத்து வலியுறும். ஆகவே, திருமுடிக்காரிக்குப் பின்னர்த் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டவன் திருக்கண்ணன் என்பது தெளிவுறும். இவர்கள் மரபினர் மிகமிகப் பிற்பட்ட காலம்வரையும் தொடர்ந்து சிற்றரசர்களாய் அரசாண்டு வந்தனர்.

மலையமான் மரபினர்

மலையமான் மரபினர்க்குத் திருக்கோவலூரேயன்றி, ஒவ்வொரு காலத்தில் ஆடையூரும் கிளியூருங்கூடத் தலைநகர்களாய் இருந்தன. கிளியூரிலிருந்து ஆண்ட மன்னர்கள் கிளியூர் மலையமான்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆண்ட பகுதிக்குச் ‘சேதி நாடு’ என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. “கிளியூர் மலையமாந் பெரியுடையானான இராசராசச் சேதிராயனும், கிளியூர் மலையமாந் ஆகார சூரநான இராச கம்பீரச் சேதிராயனும்” - எனத் திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டொன்றிலுள்ள தொடர்களை ஈண்டு ஒப்பு நோக்குக.