பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

கெடிலக்கரை நாகரிகம்


சோழர் மேலாட்சி

பொதுவாக, மலையமான் மரபினர் மற்றவரினும் சோழப் பேரரசர்கட்கு உற்ற துணைவராய் அவர்தம் மேலாட்சியின்கீழ் இருந்து வந்ததாகத் தெரிகிறது. சான்றாக, சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னனும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனும் போர் புரிந்த போது மலையன் சோழனுக்குத் துணை புரிந்த செய்தியைப் பேரி சாத்தனார் பாடிய (125ஆம்) புறநானூற்றுப் பாடல் அறிவிப்பது காண்க.

மெய்ப்பொருள் வேந்தர்

நாடும் நகரும்

மெய்ப் பொருள் வேந்தர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலாடு (திருமுனைப்பாடி) நாட்டை ஆண்டவர். இந் நாட்டிற்குச் சேதிநாடு என்னும் பெயரும் உண்டு. இந்தச் செய்திகளை,

[1]*"சேதிநன் னாட்டு நீடு திருக்கோவ லூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்
“இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்து”
"சோதிவெண் கொடிகள் ஆடும் சுடர்நெடு மறுகிற் போகிச்
சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்”
"இன்னுயிர் செகுக்கக் கண்டு எம்பிரான் அன்பர் என்றே
நன்னெறி காத்த சேதி நாதனார்

என்னும் பெரிய புராணப் பாடல் பகுதியால் அறியலாம். மெய்ப் பொருள் வேந்தரை ‘மலாடர் கோமான்’ எனச் சேக்கிழார் கூறியிருப்பதைக் கொண்டு, இவ்வேந்தர் மலையமான் மரபில் வந்தவர் என்பது புலனாகும். மலையமான் மரபில் வந்தவர்களுள் பல பங்காளிக் குடும்பங்கள் இருந்திருக்கலாம், அவற்றுள் ஒரு பிரிவுக்குச் ‘சேதியர்’ என்னும் மரபுப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். அந்தப் பிரிவைச் சேர்ந்தவரே ‘மெய்ப்பொருள் வேந்தர்’ அதனால்தான் இவர், ‘சேதியர் பெருமான்', ‘சேதி நாதனார்',


  1. *பெரிய புராணம் - மெய்ப்பொருள் நாயனார் - 1,6,8,24.