பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

153


கூறப்படுகிறது. திருநாவலூர்க் கோயிலில் பூசனை புரியும் பெரியார் ஒருவர் இந்தக் 0கருத்துப்பட என்னிடம் சில கூறினார். சேந்த மங்கலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருத்தலானும், திருநாவலூருக்கு மிக அண்மையில் இருத்தலானும், இந்தக் கருத்தில் உண்மையிருக்க முடியும். அடுத்தடுத்துள்ள சேந்த மங்கலத்தில் அரசரது அரண்மனையும், திருநாவலூரில் அரசவை கூடும் மாளிகையும் இருந்திருக்கலாம். சேந்த மங்கலம் திருநாவலூர் உட்பட 10 கி.மீ. பரப்புக்குத் தலைநகரப் பகுதி விரிந்திருக்க வேண்டும் என அவ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது எப்படியிருந்த போதிலும், திருநாவலூர் வட்டாரமே நரசிங்க முனையரையரின் தலைநகரப் பகுதி என்று பொதுப்படையாகக் கூறுவதில் தவறொன்றும் இல்லை.

காலம்

நரசிங்க முனையரையர் சுந்தரரை மகன் மை கொண்டு வளர்த்ததாக அறியப்படுவதால், இவரது காலம் சுந்தரர் காலம் என்பது புலனாகும். சுந்தரர் காலம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இக் கால ஆராய்ச்சி குறித்து, ‘சுந்தரர்’ என்னும் தலைப்பில் சிறிது விரிவாகக் காணலாம். எனவே, நரசிங்க முனையரின் காலம், எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

அருட்பணி

நரசிங்க முனையரையர் நலமும் வளமும் பெருக நாடாண்டமாண்புடன், கனிந்த இறையன்பு மிக்கவராயும் திகழ்ந்தார். சிவன் பால் இவருக்கு இருந்த ஈடுபாடு வியத்தற்பாலது. அதனால் இவர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவராக வைத்து வழிபடப்பட்டு வருகிறார்.

இடையறாத சிவத்தொண்டில் ஈடுபட்ட நரசிங்க முனையர் திருக் கோயில்களில் செல்வங்களைப் பெருக்கினார்; திங்கள் தோறும் திருவாதிரை நாளில் சிவனுக்குச் சிறப்பு விழா நடத்தினார். அந்நாளில் வரும் சிவனடியார் ஒவ்வொருவருக்கும் நூறு பொற்காககள் பரிசளிப்பது இவர் வழக்கம். ஒரு நாள் ஒரு தொண்டர் காட்சிக்குக் காமுகர் போல் காணப்பட்டதால், அங்கிருந்த பலராலும் பழிக்கப்பட்டு இழிக்கப்பட்டாராம். அஃதறிந்த நரசிங்கர், சிவக்கோலம் கொண்டோர் எவரும் வழிபடுதற்கு உரியவரே என உரைத்து அவரைப் பெரிதும் போற்றி, அவருக்கு இரட்டிப்பாக இருநூறு பொற் காசுகள் நல்கியனுப்பினாராம். இவ்வாறு பெரியபுராணம் கூறுகிறது.