பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

கெடிலக்கரை நாகரிகம்



இந்த ஆராய்ச்சி அடிப்படையில் வைத்துக் காணுங்கால், தெய்வீகன் மலையமான்களின் முன்னோனாக இருக்க முடியாது; மலையமான்களுக்குப் பின்னால், தெய்வீகன் என்னும் மன்னன் ஒருவன் திருக்கோவலூரை ஆண்டு இருக்கலாம் - என்பது புலனாகும். ஒரு வேளை, மெய்ப்பொருள் நாயனார் முதலியோர் வேண்டுமானால் தெய்வீகன் வழி வந்தவரா யிருக்கலாம். எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.

கோப்பெருஞ் சிங்கன்

குல மரபு

ஒரு காலத்தில் கெடிலக் கரையில் பேரும் புகழுமாய் அரசோச்சிய கோப்பெருஞ் சிங்கன் என்னும் மன்னவன், காடவர் அல்லது காடவராயர் என்று அழைக்கப்படும் குல மரபைச் சேர்ந்தவன். இம்மரபினர் ‘சம்பு குலக்காடவராயர்’ என்றும் அழைக்கப்படுவர். காடவர் அல்லது காடவராயர் என்பது பல்லவ மன்னரைக் குறிக்கும் பட்டப் பெயராகும். *[1]” காடவர் கோன் கழற் சிங்கன் என்னும் சுந்தரரது தேவாரப்பாடல் ஆட்சியினும் இதனை அறியலாம்.

மூன்றாம் நூற்றாண்டிற்கு மேல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையும் தமிழகத்தில் பல்லவப் பேரரசர்கள் பெருஞ் செல்வாக்குடன் அரசு புரிந்து வந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அபராசித பல்லவனோடு பல்லவப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பின்னர், சோழப் பேரரசு தலையெடுத்து, பல்லவரது தொண்டை நாட்டையும் சேர்த்து விழுங்கி விட்டது. பல்லவ மரபு சிதைந்து பல்வேறு உருவம் எடுத்தது. பல்லவ மரபினருட் பலர், சோழப் பேரரசர்களின் அமைச்சராயும் படைத் தலைவராயும் அரசாங்க அலுவலராயும் பணி புரிந்தனர்; சிலர், சோழ வேந்தர்க்கு உட்பட்ட சிறு சிறு ஆணையர் (அதிகாரிகள்) ஆகவும் சிற்றரசர்கள் ஆகவும் குறுநில மன்னர்களாகவும் விளங்கி வந்தனர். இவர்கள் பிற்காலப் பல்லவர்கள்’ என வரலாற்றில் அழைக்கப்பட்டுள்ளனர்.

தென்னார்க்காடு மாவட்டத்தில், பன்னிரண்டு - பதின்மூன்றாம் நூற்றாண்டு கால அளவில் பிற்காலப் பல்லவர்கள் சிலர் சோழப் பேரரசர்களின் சிறந்த சிற்றறசர்களாய் விளங்கி, பகைச் சிற்றரசர் பலரை முறியடித்துச் சோழப் பேரரசுக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். விக்கிரம சோழன் (1120 -1135) காலத்தில்


  1. *சுந்தரர் தேவாரம் - திருத்தொண்டத்தொகை - 9.