பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

157


இவர்கள் மிக்க பெருமையும் செல்வாக்கும் பெற்றிருந்ததாகச் சொல்லப்படுகிறது. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கெடிலத்தின் தென்கரையில் உள்ள திருமாணிகுழி வட்டாரத்தில், வளந்தானார் என்ற காடவர் சோழரின் ஆணையராய் ஆட்சி நடத்தி வந்தார். அவரை யடுத்து, அவர் மரபை (வழியைச்) சேர்ந்தவர்களான ஆட்கொல்லி, அரச நாராயணன், கச்சிராயன், வீரசேகரன், சீயன் என்பவர்கள் ஆணை செலுத்தி வந்தனர். இறுதியில் குறிப்பிடப் பட்டுள்ள சீயன் என்ற காடவனின் மகன் தான் சீயன் கோப்பெருஞ்சிங்கன் என்பவன்.

ஆட்சி

இவன், தென்னார்க்காடு மாவட்டத்தில் - திருக்கோவலூர் வட்டத்தில் கெடிலத்தின் தென் கரையில் உள்ள சேந்தமங்கலம் என்னும் ஊரைத் தலைநகராகக்கொண்டு 1243ஆம் ஆண்டு பட்ட மேற்றான். இவன் வீரத்துடன் சூழ்ச்சியும் மிக்கவன்; தன்னை வலுப்படுத்திக்கொள்ளச் சோழப் பேரரசின் வீழ்ச்சியை எதிர் நோக்கிக் கொண்டிருந்தான்; சிற்றரசனாகிய தனக்கு மேல் பேரரசனாக மேலாட்சி செலுத்தி வந்த மூன்றாம் இராசராசச் சோழனிடம் அச்சமும் பணிவும் கொண்டவன் போல் நடித்துக் கொண்டே பாண்டியப் பேரரசுடன் கள்ள நட்புக் கொண்டிருந்தான், ஈழத்து இளவரசன் ஒருவனையும் தனக்குத் துணைவனாக்கி வைத்திருந்தான். சோழப் பேரரசும் தளர்ச்சியுறத் தொடங்கியது.

சோழனின் சோர்வை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டிய வேந்தன், 1230 - 31ஆம் ஆண்டு கால அளவில் மூன்றாம் இராசராசச் சோழனை வென்று முடிகொண்ட சோழபுரத்தில் வெற்றி விழாக் கொண்டாடினான். தோல்வியுற்ற சோழ மன்னன் போசள மன்னனின் ஆதரவை நாடச் சென்று கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்துக் கோப்பெருஞ் சிங்கன் தெள்ளாறு என்னும் இடத்தில் சோழனை இடைமறித்து வென்று தன் தலைநகராகிய சேந்தமங்கலத்தில் கொண்டு வந்து சிறைவைத்தான். திருவயிந்திரபுரத்திலும் சிறை வைத்திருந்ததாகச் சொல்லப் படுகிறது. செய்தியறிந்த போசள மன்னன் வீர நரசிம்மன் (கன்னட நாட்டான்) படையுடன. புறப்பட்டு வந்து பொருது சோழனைச் சிறைமீட்டு மீண்டும் சோழப் பேரரசின் அரியணையில் அமர்த்தினான். இந்தப் போரில் கோப்பெருஞ் சிங்கனின் ஊர்கள் பலவும் கடலூர்த் துறைமுகமும் வீரநரசிம்மனால் அழிக்கப்பட்டன. இச் செய்தியைத் திருவயிந்திரபுரம் கல்வெட்டொன்று விரிவாகக் கூறுகிறது. பின்னர்க்