பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

கெடிலக்கரை நாகரிகம்


கோப்பெருஞ்சிங்கன் போசள மன்னனைப் பெரம்பலூரில் பொருது வென்று இழிவு படுத்தியதாகச் சொல்லப் படுகிறது.

அரசியல் மாற்றங்களைப் பற்றி ஒன்றும் உறுதியாகக் கூற முடியாது போலும்! கோப்பெருஞ் சிங்கன் பாண்டியருடன் கொண்டிருந்த நட்பு நீடிக்கவில்லை. 1255ஆம் ஆண்டில் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்னும் பாண்டியமன்னன் கோப்பெருஞ் சிங்கனின் சேந்தமங்கலத்தை முற்றுகை யிட்டான். அரசியல் சூழ்ச்சியில் வல்ல கோப்பெருஞ் சிங்கன் ஒருவாறு பாண்டியனோடு நட்பு உடன்பாடு செய்து கொண்டான். எனினும், தோற்றம் உண்டேல் முடிவு உண்டல்லவா? 1279ஆம் ஆண்டில் பாண்டியன் மாறவர்மன் குலசேகரன் என்னும் பாண்டிய வேந்தன் சோழநாடு, திருமுனைப்பாடி நாடு முதலிய நாடுகளையெல்லாம் வென்று பாண்டியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டான். கோப்பெருஞ்சிங்கனின் ஆட்சியும் முடிந்தது. அவனோடு காடவ குலஆட்சியும் முடிவுக்கு வந்தது. 1243இல் ஆட்சியேற்ற கோப்பெருஞ் சிங்கன், காஞ்சி புரத்திலிருந்து காவிரிக்கரை வரை தன் ஆட்சியைப் பரப்பி ஆட்சி புரிந்து விட்டு 1279இல் வீழ்ச்சியடைந்தான்.

மாட்சி

கோப்பெருஞ் சிங்கன் வீரமும் அரசியல் சூழ்ச்சியும் ஆட்சித்திறனும் உடையவனாயிருந்ததன்றி நல்ல தமிழ்ப் புலமையும் முதிர்ந்த கலையுணர்ச்சியும் கனிந்த கடவுள் அன்பும் மிக்கவனாயும் திகழ்ந்தான். தில்லைக் கூத்தப் பெருமானிடம் இவனுக்கு ஈடுபாடு மிகுதி. தில்லைக் கோயிலின் கீழைக் கோபுரம் கட்டியவன் இவனே. தெற்கே தஞ்சையிலிருந்து வடக்கே திராட்சாராமம் (ஆந்திரா - கோதாவரி மாவட்டம்) வரையும் சிவன் கோயில்கள் பலவற்றில் பல்வேறு திருப்பணிகள் புரிந்துள்ளான்.

சிவனுக்குத் திருப்பணிகள் புரிந்தது போலவே தமிழன்னைக்கும் இவன் பணி பல புரிந்துள்ளான்; தமிழ்ப் புலவர்களை ஆதரித்துத் தமிழ்க் கலைகளை வளர்த்தான். சொக்கசீயர் என்னும் புலவர் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். கோப்பெருஞ் சிங்கனும் ஒரு தமிழ்ப் புலவனாய் விளங்கினான். இவனது பாடல், கோதாவரி மாவட்டம் - இடர்க்கரம்பை அல்லது திராட்சாராமம் எனப்படும் ஊரிலுள்ள ஒரு சிதைந்த கல்வெட்டில் காணப்பட்டுள்ளது.

கோப்பெருஞ் சிங்கனைப் பற்றிப் பல்வேறு இடங்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. வடார்க்காடு மாவட்ட வந்தவாசி வட்டத்தைச் சேர்ந்த வயலூரில் ஏரிக்கரை மேல் உள்ள