பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை அரசுகள்

161


என்னும் (1189) பாடலால் அறியலாம். சிற்றரசர் பலரேயன்றி, முடியுடைப் பேரரசராய சேர சோழ பாண்டியரும் இவ் வாணனுக்கு அடங்கியிருந்தனர் எனத் தொண்டை மண்டல சதகமும் பெருந்தொகைப் பாடல்களும், தமிழ் நாவலர் சரிதைப் பாடல்களும் அறிவிக்கின்றன. வாணனது வாயிற்படியில் ஆர் (ஆத்தி), வேம்பு, பனை, அரசு, அத்தி ஆகியவை நிற்கும் என்று பெருந்தொகைப் பாடல் (1192) ஒன்று கூறுகிறது.

“....அவன் முன்றில்வாய்....

ஆரும் நிற்கும் உயர் வேம்பு நிற்கும் வளர்
பனையும் நிற்கும் அதனருகிலே
அரசு நிற்கும் அரசைச் சுமந்தசில
அத்தி நிற்கும் அடையாளமே”

என்பது அப் பாடலின் இறுதிப் பகுதி. இங்கே குறிக்கப் பட்டிருப்பவை மரங்கள் அல்ல. ஆர் நிற்கும் என்றால், ஆத்திமாலை யணிந்த சோழன் நிற்பான் என்பது பொருள். அவ்வாறே வேம்பு என்றால், வேப்பமாலை யணிந்த பாண்டியன், பனை என்றால், பனைமாலை யணிந்த சேரன் என்று பொருளாம். அரசு நிற்கும் என்றால் அரசர் பலர் நிற்பர் என்பது பொருள். அத்தி நிற்கும் என்பதற்கு, அரசர்கள் ஏறிவந்த யானைகள் நிற்கும் என்று பொருளாம். இப் பாடற் பகுதியால் வாணனது பெரும்புகழ் புலனாகும்.

நாடு

மலையமானாடு, மலாடு, சேதிநாடு, திருமுனைப்பாடி நாடு, நடுநாடு என்றெல்லாம் அழைக்கப்படுவது தென்னார்க்காட்டு மாவட்டப் பகுதிதான். இந்தப் பகுதிக்குள்ளேயே வாணர் மரபினர் ஆண்டுவந்த சிறு பகுதி ‘மகத நாடு’ என அழைக்கப்பட்டது. இதனை, பெருந்தொகை என்னும் நூலில் ஏகம்பவாணனைப் பற்றியுள்ள

"வாரும் ஒத்தகுடி நீருநாமும்

மகதேசன் ஆறை நகர் காவலன்
வாண பூபதி மகிழ்ந் தளிக்க மிகு
வரிசை பெற்றுவரு புலவன் யான்"

என்னும் பாணாற்றுப்படைப் (1192) பாடல் பகுதியால் அறியலாம். இப் பாடலில், ஆறைநகர் காவலனாகிய வாணன் ‘மகதேசன்’ எனச் சுட்டப்பட்டுள்ளான். மகத+ஈசன்=மகதேசன். அஃதாவது மகதநாட்டின் தலைவன் மகதேசன் என்பது பொருளாம். எனவே வாணர் ஆண்ட பகுதிக்கு மகதநாடு’ என்னும் பெயர் உண்மை புலப்படும்.

கெ.11.