பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

கெடிலக்கரை நாகரிகம்


சொல்லியனுப்பினார். திருவதிகை வந்து விடுமாறு தமக்கையார் பதில் மாற்றம் சொல்லியனுப்பினார். அவ்வாறே சமணர் அறியாதபடி இரவோடிரவாகத் திருவதிகை போந்து தமக்கையின் அடிபணிந்தார் தம்பி, தமக்கையார் தம்பியின் நெற்றியில் திருநீறு பூசித் திருவதிகைச் சிவனை வணங்குவித்தார். மருள் நீக்கியாரின் சூலைநோய் பறந்தோடியது. சமணர்கள் இழைத்த பல கொடுமைகளினின்றும் மருள்நீக்கியார் தப்பிப் பிழைத்து, அப்பர், திருநாவுக்கரசர் என்னும் பெயர்களுடன், சிவப் பதிகள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு ஆயிரக் கணக்கான தேவாரப் பாடல்களை அருளிச்செய்து சைவமும் தமிழும் ஒருசேரத் தழைக்கச் செய்தார்.

திருநாவுக்கரசரால் தமிழுலகம் அடைந்திருக்கும் நன்மைக்கும் சிறப்பிற்கும் அளவேயில்லை. தமிழுலகத்திற்கு இந்த வாய்ப்பளித்த பெருமையில் திலகவதியார்க்குப் பெரும்பங்கு உண்டு. அம்மையார் இல்லையேல் நாம் அப்பர் அடிகளைப் பெற்றிருக்க முடியாது; திலகவதியார் இல்லையேல் நாம் திருநாவுக்கரசரைப் பெற்றிருக்க முடியாது; தருமசேனர் தான் கிடைத்திருப்பார். எத்தனையோ சேனர்களுக்குள் ஒரு சேனராகத் தருமசேனர் மறைந்துவிட்டிருப்பார். தரும சேனராக மாறிய மருள் நீக்கியாரைத் திருநாவுக்கரசராக மாற்றித் தந்த பெருமை திலகவதியாரையே சாரும்.

அந்தோ! அம்மையாரின் வாழ்க்கையை எண்ணும் போது இரக்கம் ஏற்படுகிறது. ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்று வாசகம் சொல்வது வழக்கம். ஆனால், அம்மையாரோ, ‘கல்யாணம்’ பண்ணாமலேயே கைம்பெண்’ ஆகிவிட்டார், என்ன கொடுமை! இந் நிலைமை அம்மையாரின் உயர்ந்த பண்பை அறிவிக்கிறது; அதே நேரத்தில் சமுதாயத்தின் கொடுமையையும் அறிவிக்கிறது. ஒருவேளை, திருநாவுக்கரசரை உருவாக்கி உலகிற்கு அளிப்பதற்காகத்தான் திலகவதியார்க்கு இரங்கத்தக்க இந்நிலை ஏற்பட்டதோ! அம்மையார் வீட்டு வாழ்க்கையில் தோல்வியுற்றாலும், நாட்டு வாழ்க்கையில் முழு வெற்றி பெற்று நற்பணி யாற்றி நற்பெயர் பெற்றிருப்பது. உள்ளத்திற்கு ஆறுதலும் நிறைவும் ஒருசேர அளிக்கிறது.

திலகவதியார் சைவவேளாளர் குலத்தினர். இவர்க்கு நேர்ந்த இரங்கத்தக்க நிலைமை தொடர்பான அச்சம், இன்னமும் திருவாமூர்ப் பகுதிச் சைவ வேளாளர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. மணம் பேசி உறுதி செய்ததும் மனம் நிறைவேறுவதற்கு முன்னே மணமகன் கலிப்பகையார் போரில் மாண்டு விட்டதால் திலகவதியார் கைம்மை பூண் நேர்ந்த