பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கெடிலக்கரை நாகரிகம்


என்னும் நூற்பாவும், மற்றும் பல்வேறு இலக்கிய ஆட்சிகளும் மேலும் உறுதி செய்யும்.

ஆறும் ஊறும் கொண்டுள்ள நெருங்கிய தொடர்பைக் கண்டறியவே இவ்வளவு வழி கடந்துவர வேண்டியிருந்தது. நாம் மேற்கொண்ட இந்தச் சிறிய ஆராய்ச்சியிலிருந்து, பழங்கால மக்கள் ஆற்றங்கரைப் பகுதியையே மிகவும் நாடினர் என்பதும், ஆற்றங்கரைக் குடியிருப்புகளே ஊர்கள் என அழைக்கப்பட்டன என்பதும், நாளடைவில் ஒரு நிலத்துக் குடியிருப்பைக் குறிக்கும் பெயர்கள் மற்ற நிலத்துக் குடியிருப்புகளையும் மாறிக் குறிக்கலாயின என்பதும் தெள்ளிதின் விளங்கும். மற்றும் இவ்வாராய்ச்சியிலிருந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத குறிப்பாவது, ஆற்றங்கரை ஊர்களே வாழ்க்கைக்கு வசதியான உறையுள்களாகும் என்னும் கருத்து. இதனை, திவாகர நிகண்டில் உள்ள,

[1] “பூக்கம், கொடிக்காடு, பூரியம்,உறையுள்,
பாக்கம். அருப்பம், அகலுள். பதியே.
கோட்டம், வசதி, தாவளம், நியமம்,
வாழ்க்கை, தண்ணட, மருதநிலத்து ஊர்ப்பெயர்"

என்னும் நூற்பா தெளிவாகத் தெரிவிக்கிறது. ஆற்றங்கரை வயல் வளம் மிக்க மருதநிலத்துக் குடியிருப்புக்களைக் குறிக்கும். மேலுள்ள பெயர்களுள் உறையுள், வசதி, வாழ்க்கை என்னும் பெயர்கள் ஈண்டு விதந்து குறிப்பிடத்தக்கன. இம்மூன்று பெயர்களும் மருதநிலத்து ஊர்களே உறைவதற்கு ஏற்றவை - வசதியானவை - தங்கிவாழ்தற்கு உரியவை என்னும் கருத்துக்களைத் தெரிவிக்கின்றன வன்றோ? கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு? ஆற்றங்கரை ஊர்களின் வாழ்க்கை வசதிச் சிறப்பை, இலக்கிய இலக்கணங்களிலிருந்து சான்று காட்டித்தானா மெய்ப்பித்தாக வேண்டும்? இந்தக் காலத்து மக்கள் நேரிலே வாழ்ந்து பார்த்தே தெரிந்து கொண்டிருக்கிறார்களே! இந்தக் காலத்தில் என்றென்ன - அந்தக் காலத்திலும் - எந்தக் காலத்திலும், வசதியான ஆற்றங்கரை வாழ்க்கையிலிருந்தே, கலை - கல்வி - நாகரிக வளர்ச்சிகள் தோன்றின . தோன்றும் என்னும் கொள்கைக்கு அடிப்படையிடவே இத்தனை சான்றுகள் பயன்படுத்தப்பட்டன.


  1. சேந்தன் திவாகரம் - இடப்பெயர்த் தொகுதி - 99.