பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

175


சுந்தரர் காலம்

சுந்தரர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்று சிலரும், எட்டாம் நூற்றாண்டு என்று சிலரும், ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி என்று சிலரும், ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதி என்று சிலரும் கூறுகின்றனர். திருநாவுக்கரசரின் காலத்தைக் கணிக்க அவர் காலத்தில் ஆண்ட மகேந்திரவர்ம பல்லவன் உதவியாய் இருந்தது போல சுந்தரர் காலத்தைக் கணிக்க உதவக்கூடிய அரசர் யார் என்று ஆறாயவேண்டும். சுந்தரர் காலத்தில் கழற்சிங்கன் என்னும் பல்லவ மன்னனும், சேரமான் பெருமாள் என்னும் சேர மன்னனும், நரசிங்க முனையரையர், ஏயர்கோன், பெருமிழலைக் குறும்பர் முதலிய சிற்றரசர்களும் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இம் மன்னர்களுள் கழற்சிங்கன் என்னும் பல்லவ மன்னவன் சுந்தரர் காலத்திலேயே வாழ்ந்தான் என்பதற்கு, சுந்தரர் தேவாரத்தில் வெளிப்படையான அகச்சான்று கிடைத்துளது. அது [1]

★"கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கு மடியேன்”

என்பதாகும். காடவர் கோன் என்பது, பல்லவரைக் குறிக்கும் பட்டப் பெயராகும். எனவே, கழற்சிங்கன் ஒரு பல்லவ மன்னன் என்பது புலனாகும். சுந்தரர் அவனை, ‘உலகெலாங் காக்கின்ற பெருமான் என நிகழ்காலத்தில் வைத்துப் புகழ்ந்துள்ளதால், அவர் காலத்தில் அவன் அரசாண்டு கொண்டிருந்தான் என்பது தெளிவு. எனவே, கழற்சிங்கனது காலம் தெரிந்தால் சுந்தரர் காலம் தெரிந்துவிடும். ஆனால், இந்தக் கழற்சிங்கன் என்பவன் எந்தப் பல்லவப் பேரரசன் என்பது தெரியவேண்டுமே!

கழற்சிங்கன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் தான் (கி.பி. 630 -668) என்று சிலரும், இரண்டாம் நரசிம்மவர்மன் தான் (680 -729) என்று சிலரும், இரண்டாம் நந்திவர்ம பல்லவன்தான் (731 - 795) என்று சிலரும், மூன்றாம் நந்திவர்மன்தான் (844 - 866) என்று சிலருமாகப் பல்வேறு விதமாகச் சொல்கின்றனர். ஒவ்வொருவரும் தத்தம் கொள்கையை உறுதி செய்ய என்னென்னவோ சான்றுகள் தருகின்றனர். இந் நிலையில் எவர் கூற்றை நாம் ஏற்றுக்கொள்வது?

சுந்தரர் ஏழாம் நூற்றாண்டினராக இருக்க முடியாது. திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர் என்பதும், திருநாவுக்கரசர் காலம் ஏழாம் நூற்றாண்டு என்பதும் முன்னர் பக்கம் - 170) அறிவிக்கப் பட்டுள்ளன. திருநாவுக்கரசரையும் திருஞான சம்பந்தரையும் மிகவும் புகழ்ந்து


  1. *சுந்தரர் தேவாரம் - திருத்தொண்டைத் தொகை - 9.