பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

கெடிலக்கரை நாகரிகம்


இவர் தாய் மாமன் திருக்கோவலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூருக்குக் குழந்தைப் பருவத்திலேயே அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். இவரது இளமைப் பெயர் ‘சுவேதவனன்’ என்பது.

மெய்யறிவு

சுவேதவனன் இளமையிலேயே மெய்யுணர்வு உடையவராய்த் திகழ்ந்தார். ஒரு நாள் இவர் தெருவில் விளையாடிக்கொண் டிருந்தபொழுது பரஞ்சோதி முனிவர் என்பார் இவருக்கு மெய்யறிவு கொளுத்தி ‘மெய்கண்டார்’ என்னும் சிறப்புப் பெயர் ஈந்து சென்றார். மெய்கண்டார் சைவசித்தாந்தத்தின் அடிப்படை உண்மைகளை ஆய்ந்துணர்ந்து ‘சிவஞான போதம் ‘என்னும் சிறந்த நூல் ஒன்று இயற்றினார்.

அறிவாசான்

மெய்கண்டார் குடும்பத்தாருக்கு, திருத்துறையூர்ச் சகலாகம பண்டிதர் என்பவர் குருவாவர். இவர் ஆதிசைவ அந்தணர் மரபைச் சேர்ந்தவர். குருவாகிய இவரிடம் அறிவுபெற மெய்கண்டார் செல்லவில்லை. அதனால் இவரே மெய்கண்டாரிடம் வராத காரணம் வினவச் சென்றார். அப்போது மெய்கண்டார் ஆணவத்தைப் பற்றி மாணாக்கர் கட்கு விளக்கிக்கொண்டிருந்தார். ‘ஆணவம் எப்படியிருக்கும்’ என்று சகலாகம பண்டிதர் மெய்கண்டாரைக் கேட்டார். ‘இதோ இப்படித்தான் இருக்கும், என்று மெய்கண்டார் பண்டிதரையே சுட்டிக்காட்டினார். பின்னர்ப் பண்டிதர் உண்மை தெளிந்து மெய்கண்டார்க்கு மாணாக்கரானார். மாணவர் குருவாகவும் குரு மாணவராகவும் மாறியது வியப்பே. மற்றும், வேளாள மரபினர் ஒருவர், ஆதிசைவ அந்தணக் குருக்கள் மரபினருக்கு அறிவாசானாக (ஞானகுருவாக) விளங்கியது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. மெய்கண்டார் சகலாகம பண்டிதர்க்கு மெய்யறிவு நல்கி அருள்நந்தி’ (அருணந்தி) என்னும் திருப்பெயரையும் சூட்டினார். இத்தகு சிறப்பிற்குரியவர் மெய்கண்டார். இவருக்கு அருணந்தி உட்பட மாணக்கர் நாற்பத்தொன்பதின்மர் இருந்தனர்.

மெய்கண்டார் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி எனச் சொல்லப்படுகிறது.

அருணந்தி சிவாசாரியார்

இவர் கடலூர் வட்டத்தில் பண்ணுருட்டிக்கு வடமேற்கே 10கி.மீ. தொலைவிலுள்ள திருத்துறையூர் என்னும் ஊரில்