பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

179


ஆதிசைவ அந்தண மரபில் தோன்றினார். இவரது இயற்பெயர் சதாசிவம். இவர் பல்வகைக் கலைநூல்களையும் கற்றுப் பெரும் புலவராய் விளங்கியதால் ‘சகலாகம பண்டிதர்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.

சகலாகம பண்டிதர், குலமரபுப்படி தம் மாணாக்கரான திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவரால் மெய்யறிவு கொளுத்தப்பட்டு அருள்நந்தி என்னும் சிறப்புப் பெயர் பெற்ற வரலாறு முன்னரே கூறப்பட்டுள்ளது. இவர் சந்தானாசாரியர் நால்வர் வரிசையில், மெய்கண்டாருக்கு அடுத்தபடி இரண்டாம் தகுதி உடையவர். இவர் இயற்றிய நூல்கள்: சிவஞானசித்தியார், இருபா இருபஃது என்பன. காலம் : பதின்மூன்றாம் நூற்றாண்டெனக் கருதப்படுகிறது.

மனவாசகம் கடந்தார்

இவர் கடலூர் வட்டத்தில் கெடிலத்தின் வடகரையிலுள்ள திருவதிகையில் பிறந்தவர். இதனால், இவர் ‘திருவதிகை மனவாசகம் கடந்தார்’ என அழைக்கப்படுவார். முதல் சந்தான குரவராகிய மெய்கண்டாரின் மாணவருள் இவரும் ஒருவர். இவர் 1255ஆம் ஆண்டளவில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. இவர் ‘உண்மை விளக்கம்’ என்னும் உயரிய நூல் ஒன்று இயற்றியுள்ளார்.

வேதாந்த தேசிகர்

கெடிலம் ஆற்றின் கரையிலுள்ள ஒரே வைணவத் திருப்பதி திருவயிந்திரபுரமாகும். இங்கேதான் வேதாந்த தேசிகர் என்னும் வைணவப் பெரியார் வாழ்ந்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்கள் இயற்றினார். இவர் கெடிலக்கரையில் வாழ்ந்து பெருமையுற்றிருப்பினும், இவர் பிறந்தது பாலாற்றங்கரை. இவர் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியாகிய துப்புல் என்னுமிடத்தில் அனந்த சூரி என்னும் பெரியாருக்கும் தோதாரம்பையார் என்னும் அம்மையாருக்கும் 1269ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இளமைப் பெயர், வேங்கடநாதன் என்பதாகும். இருபது வயதிற்குள் பல்கலை நூல்களும் பயின்று பெரிய அறிஞரானார். காஞ்சியினின்றும் வந்து திருவயிந்திரபுரத்தில் நிலையாகத் தங்கிப் பல்லாண்டுகள் இருந்தார். தமிழிலும் வடமொழியிலும் கைதேர்ந்த வேங்கடநாதர் அவ்விரு மொழிகளிலும் நூற்றுக்கும் மிக்க தரமான நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய தமிழ்ப் படைப்புக்கள் ஆழ்வார்களின் உருட்பாடல்களுக்கு ஒப்பான பெருமையுடையவை எனவும், வடமொழிப் படைப்புக்களிற் பல காளிதாசன், வால்மீகி போன்ற மாபெரு வடமொழி