பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

கெடிலக்கரை நாகரிகம்


தொடங்கினாராம். அவர் ஊர்தோறும் சென்று முருகன் மேல் பாடிய திருப்புகழ்ப் பாடல்களேயன்றி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் முதலிய பாடல் நூல்களும் இயற்றியுள்ளார். பழைய காலப் படிப்பாளிகட்கு இந்தப் பாடல்கள் எல்லாம் தண்ணிர்பட்டபாடு. அருணகிரியார் சந்தப் பாடலுக்குப் பெயர் பெற்றவர். [1] ‘வாக்கிற்கு அருணகிரி’ என்பது ஆன்றோர் மொழி.

வில்லிபுத்தூரர்

பாரத இராமாயணக் கதைகள் இந்திய மக்கள் அனைவரும் அறிந்தவை. பாரதக் கதையைத் தமிழில் விருத்தப் பாவால் பாடியவர் வில்லிபுத்துரார் என்னும் பெருமகனாவார். கம்பர் பாடிய இராமாயணம் ‘கம்பராமாயணம்’ என அழைக்கப்படுதல்போல, வில்லிபுத்துரார் பாடிய பாரதம் ‘வில்லி பாரதம் என அழைக்கப்படுகிறது.

தமிழில் கம்பர் இராமாயணம் பாடியதுபோல் பாரதம் பாடிய பெருமைக்குரிய வில்லிபுத்துரார், திருமுனைப்பாடி நாட்டிலுள்ள சனியூர் என்னும் ஊரில் வைணவ அந்தண குலத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் வீரராகவன். வைணவ ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவராகிய பெரியாழ்வாருக்கு வில்லிபுத்துரார்’ என்னும் பெயரும் உண்டு, அவர்மேல் உள்ள அன்பினால் வில்லிபுத்துரார் என்னும் பெயர் இவருக்கும் சூட்டப்பட்டது. சுருக்கமாக இவரை ‘வில்லி’ எனக் குறிப்பிடுவதும் உண்டு.

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள வக்கபாகை என்னும் ஊரில் தோன்றிய கொங்கர்குலத் தலைவனாகிய வரபதியாட் கொண்டான் என்னும் குறுநில மன்னன் வில்லிபுத்துராரை ஆதரித்து வந்தான். அவனது வேண்டுகோளின்படி இவர் தமிழில் பாரதக் கதையைப் பாடினார். தம்மிடம் தோற்ற புலவரின் காதைக் குடைந்து அறுப்பது வில்லியின் வழக்கமாம். ‘குறும்பி யளவாக் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை’ என்னும் பாடற்பகுதி ஈண்டு நினைவு கூறத்தக்கது. ஆனால், இந்த வரலாறு எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. இவர் திருவண்ணாமலை சென்றபோது அருணகிரி நாதரிடம் தோற்றுப்போனதாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.


  1. *தனிப்பாடல் திரட்டு, tதனிப்பாடல் திரட்டு - பொற்களந்தைப் படிக்கா சுத் தம்பிரான் பாடல்.