பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

கெடிலக்கரை நாகரிகம்


சிறந்தசெவிக் கமுதமெனத் தமிழ்மொழியின்
விருத்தத்தாற் செய்க வென்றான்" (22)

வில்லிபுத்துாரார் பாரதம் செய்வதால், தாம் இருவரும் பிறந்த திருமுனைப்பாடி நாட்டிற்கு அழியாப் புகழ் நின்று நிலைக்கும் என வரபதியாட் கொண்டான் கூறியிருப்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வரபதியாட் கொண்டான் காலம் பதினைந்தாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. எனவே, வில்லியாரின் காலமும் அஃதே!

நல்லாற்றுர் சிவப்பிரகாச சுவாமிகள்

கோயில் பெருமை

நல்லாற்றுார் கெடிலம் பாயும் கடலூர் வட்டத்தில் கடலூருக்கு வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் கடலூர்த் தொகுதியில் - கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது. இங்கே சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் அடிகளார் தங்கி அருட்பணி புரிந்து வீடுபேறடைந்துள்ளார். அடிகளாரின் திருவுடல் அடக்கம் (சமாதி) இங்கே உள்ளது. அடக்கத்தின்மேல் ஒரு கோயில் எழுப்பியுள்ளனர். அதற்குச் சிவப்பிரகாச சுவாமி கோயில்’ என்று பெயர். ஆண்டுதோறும், அடிகளார் வீடுபேறுற்ற புரட்டாசி முழுநிலா (பருவம்) நாளில் திருவிழா நடைபெறும்.

சிவப்பிரகாச அடிகளார் ஒரு பெரிய கல்விக் கடல் எண்ணற்ற கற்பனைகள் மிக்க நூல்கள் பல இயற்றியுள்ளார்; அதனால், ‘கற்பனைக் களஞ்சியம்’ என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இத்தகைய அருட்கலைச் செல்வரின் திருக்கோயிலை வலம்வந்து வழிபட்டால் அறிவிலிகள் நல்லறிவு பெறுவர். கல்வியில் பின் தங்கியுள்ளவர்கள் நல்ல திறமை பெறுவர் - பேசாத பிறவி ஊமையரும் பேசுவர் - என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடத்தில் பரவலாக உள்ளது. அதனால், தொலைவிலுள்ள வெளியூர்களிலிருந்தும் மக்கள் பேசாத ஊமைப் பிள்ளைகளை அழைத்து வந்து நல்லாற்றுாரில் திங்கள் கணக்கில் தங்கிச் சிவப்பிரகாசர் கோயிலைப் பல சுற்றுக்கள் வலம்வந்து வழிபடச் செய்து அழைத்துப் போகின்றனர். இந்த வழிபாட்டால் தக்க பயன் கிடைப்பதாகவே சொல்லப்பட்டு வருகிறது. இந்தப் பக்கத்தில் உள்ளவர்களும் - இந்த விவரம் அறிந்தவர்களும் எங்கேனும் ஒர் ஊமைப் பிள்ளையைக் கண்டு விட்டால், அந்தப்