பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

185


பிள்ளையின் பெற்றோரைப் பார்த்து, ‘நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமி கோயிலுக்கு அழைத்துப் போகக் கூடாதா?’ என்று கேட்டுச் சிவப் பிரகாச சுவாமி கோயிலை அறிமுகம் செய்து வைப்பது இன்றும் வழக்கத்திலுள்ளது. நம்பிக்கை ஒரு பெரிய மருத்துவம் அன்றோ?

வரலாறு

இத்தகு சிறப்பிற்குரிய சிவப்பிரகாசர் காஞ்சிபுரத்தில் வீரசைவ மரபில் தோன்றினார். தந்தையார் குமாரசாமி தேசிகர். தம்பியர் வேலையர், கருணைப் பிரகாசர் என்னும் இருவர். தங்கை ஞானாம்பிகை. தம்பியர் இருவரும் தமையனைப் போலவே புலவர்கள். சிவப்பிரகாசர் திருவண்ணாமலை போந்து குருதேவர் என்னும் ஆசானிடம் கல்வி பயின்றார். பின்னர்த் துறைமங்கலம் என்னும் ஊரடைந்து அண்ணாமலை ரெட்டியார் என்பார் அமைத்துத் தந்த அறப்பள்ளியில் (மடத்தில்) தங்கி அறிவுப்பணி புரிந்து வந்தார். பின் திருநெல்வேலி சென்று வெள்ளியம்பலத் தம்பிரான் என்னும் ஆசானிடம் இலக்கணம் பயின்று தேர்ந்த புலவரானார்; தம் ஆசானை எதிர்த்த புலவரொருவருடன் திருச்செந்தூரில் போட்டியிட்டு, ‘செந்தில் நிரோட்டக யமக அந்தாதி’ என்னும் நூல் பாடி வெற்றி பெற்றார்.

பின் சிவப்பிரகாசர் ஆசானிடம் விடைபெற்றுக் கொண்டு வெங்கனூர் வந்தடைந்தார். அங்கே சில காலம் தங்கிப் பின் தில்லை போந்தார். பின்னர் அங்கிருந்து காஞ்சியை வழிபடப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். வழியில் சாந்தலிங்க சுவாமிகள் என்பவர் வாயிலாக, புதுச்சேரிக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவில் கடற்கரையிலுள்ள பொம்மபுரம் எனப்படும் பொம்மைய பாளையம் என்னும் அழகிய ஊரில் எழுந்தருளி யிருந்த சிவஞான பாலைய தேசிகர் என்னும் அருளாசிரியரைப் பற்றி அறிந்து அவரையடைந்து வழிபட்டு அவரது அருளாதரவைப் பெற்றார்.

நல்லாற்றுார்

பொம்மபுர ஆதீன அடிகளார்க்கு மயிலத்திலும் நல்லாற்றுாரிலும் அறப்பள்ளிகள் உண்டு. சிவப்பிரகாசர் நல்லாற்றுாரில் வந்து தங்கினார். அவரது வாணாள் முடிவுற்றதும் இங்கேயே. சிவப்பிரகாசர் எங்கோ பிறந்து இடையில் எங்கெங்கோ தங்கியிருப்பினும், இறுதியில் நிலையாக வந்து தங்கி வாழ்ந்து முடிந்தது கெடில நாட்டு நல்லாற்றுார் ஆதலின், இவர் ‘நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகள்’ எனப் பெயர் வழங்கப் பெற்றார். ‘துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்’