பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

கெடிலக்கரை நாகரிகம்


அடிகளார்க்குத் தம் அன்புக் காணிக்கையாகப் பழ வகைகளைக் கூடை கூடையாகக் கொண்டுவந்து குவித்தவர் பலர். ஒருவரோ டொருவர் போட்டி போட்டுக் கொண்டு தாமே வலிந்து சென்று அடிகளார்க்கு விசிறி விசிறுவதைத் தம் பிறவிப் பெரும் பயனாகக் கருதி இறுமாந்தவர் பலர். மணிக் கணக்கில் அடிகளாரின் திருமுன்பு அடக்க ஒடுக்கமாக அமர்ந்து உரையாடி உவகைக் கடலில் திளைத்துச் செம்மாந்தவர் பலர்.

இத்தகு பெருஞ் சிறப்புகட்குரிய பெருமகனார் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே வாழ்ந்தார்?

பிறப்பு வளர்ப்பு

கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருநாகேசுரம் என்னும் திருப்பதியில், சீமுக ஆண்டு வைகாசித் திங்கள் நான்காம் நாள் (17-5-1873), வீரசைவ மரபினரான அண்ணாமலை என்னும் ஐயாவுக்கும் பார்வதி என்னும் அம்மையாருக்கும் திருமகனாராக அடிகளார் தோன்றினார். பெற்றோர் இட்ட பிள்ளைமைப் பெயர் பழநி என்பது. காவிரிக்கரையில் பிறந்த பழநி, பிறந்த ஆறு திங்களுக்குள் கெடிலக்கரைக்கு வந்துவிட்டார்.

கெடிலம் சுற்றி வளைத்துக்கொண்டு ஒடும் திருப்பாதிரிப் புலியூர் நகர் பற்றி முன்பே பேசப்பட்டுள்ளது. அந் நகரில் கோயில் தெருவில் ‘ஞானியார் மடாலயம்’ என்னும் ‘அருள்நெறியகம்’ ஒன்று உள்ளது. அவ் வருள்நெறியகத்தின் தலைவராய் (மடாதிபதியாய்) அப்போது ‘சிவ சண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்னும் அடிகளார் வீற்றிருந்தார். இவர் நான்காம் பட்டத்து அடிகளாராவார். இவருக்கு முன்பு அருள் நெறியகத் தலைவராய் மூவர் வீற்றிருந்தனர். முதல் பட்டத்து அடிகளார் திருக்கோவலூரில் அருள்நெறியகம் அமைத்து அருளாட்சி புரிந்து வந்தார். அவர்கட்கு ‘ஆறுமுக சுவாமிகள்’ என்பது அருள்நெறிப் பட்டப் பெயர். திருக்கோவலூரிலுள்ள தலைமை நிலையத்திற்கு, செஞ்சி, திருவண்ணாமலை, விருத்தாசலம், ஆரணி, திருப்பாதிரிப் புலியூர் முதலிய ஊர்களில் கிளை நிலையங்கள் ஏற்பட்டிருந்தன. அடிகளார் எல்லா ஊர் நிலையங்கட்கும் சென்று தங்கி வரினும், திருக்கோவலூரிலேயே பெரும்பாலும் தங்கியிருந்தார். அவர்கள் இறுதி யெய்தியதும் அங்கேயே.

ஆறுமுக சுவாமிகட்குப் பின், இரண்டாம் முறை பட்டத்து அடிகளார் பெரும்பாலும் திருப்பாதிரிப் புலியூர் அருள் நெறியகத்திலேயே தங்கி வாழ்ந்து வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்று வரையும் அடுத்தடுத்துப் பட்டத்திற்கு வந்த