பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டுப் பெருமக்கள்

191


அடிகளார் அனைவரும் திருப்பாதிரிப் புலியூர் நிலையத்தையே தலைமை நிலையமாகக் கொண்டுவிட்டனர். இருப்பினும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார்மடம், ‘திருக்கோவலூர் ஆதீனம்’ என்றே இன்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.

திருப்பாதிரிப் புலியூரில் அருளாட்சி புரிந்து வந்த நான்காம் பட்டத்து அடிகளார்க்கு, திருநாகேசுரத்தில் பிறந்த பழநியின் குடும்பத்தினர் உறவுமுறை உடையவர்கள். எனவே, அடிகளார், பழநியின் தந்தையைக் குடும்பத்துடன் பாதிரிப்புலியூருக்கு வந்து அருள் நெறியகத்தின் செயலாளர் பொறுப்பை ஏற்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அவரும் ஆறு திங்களும் நிரம்பாத பச்சிளங் குழந்தை பழநியுடன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வந்து பாதிரிப்புலியூரில் குடியேறினார்.

பட்டம் சூடுதல்

குழந்தை பழநி வளர்பிறையென வளர்ந்து வந்தது. தமிழ், தெலுங்கு, வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் சிறுவர் பழநிக்குக் கற்பிக்கப்பட்டன. 1889 ஆம் ஆண்டில் இளைஞர் பழநி பிரீ - மெட்ரிகுலேழ்சன் (Pre - Matriculation) வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது நான்காம் பட்டத்து அடிகள், தமக்கு உடல்நிலை மாறுபாடுற்று இறுதிநிலை அணுகிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்; பள்ளிப் படிப்பை நிறுத்திப் பழநிக்கு, விரோதி ஆண்டு ஐப்பசித் திங்கள் மூன்றாம் நாள் (20-11-1889) துறவு (சந்நியாசம்) ஈந்தார்; ஞானியார் மடத்தின் அருள் தலைவராகப் பட்டம் சூட்டினார்; ‘சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்னும் பட்டப் பெயரும் ஈந்தார். நான்காம் பட்டத்து அடிகளார் இறையடி யெய்த, பழநி தமது பதினேழாவது வயதில் ஐந்தாம் பட்டத்து அடிகளாராகப் பதவியேற்றார்.

இளமையிலேயே துறவறமும் அருளாசிரியத் தலைமையும் ஏற்ற ஐந்தாம் முறை அடிகளார், மடத்துச் சோற்றை வளமாக உண்டுகொண்டு வறிதே தசை மூட்டையை வளர்த்துக் கொண்டிருக்கவில்லை; தக்க ஆசிரியர்களை அமர்த்திக் கொண்டு தமிழ்மொழியையும் வடமொழியையும் பரந்த அளவில் பயின்று பெரும்புலமை பெற்றார்; தமது நேரம் முழுவதையும் நூல் ஆராய்ச்சியிலேயே ஈடுபடுத்தினார்.

அடிகளாரின் அருட்பணிகள்

கடல் நீரை முகந்து கறுத்துத் திரண்ட முகில்கள் பெருமழை பொழிவது போன்று, சிறக்கக் கற்றுத் தெளிந்த அடிகளார் கருத்துச் செறிந்த சொல் மழை பொழியத் தொடங்கினார். ஒரு மணிநேரம் பேசினாலே பெருமூச் செறிந்து