பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

197


தெரியாத 170 ஆம் பாடலிலும் கபிலர் பாடிய 291ஆம் பாடலிலும், குறுந்தொகையில் கபிலர் பாடிய 312 ஆம் பாடலிலும், அகநானூற்றில் கல்லாடனார் இயற்றிய 209ஆம் பாடலிலும் புறநானூற்றில் கபிலர் பாடிய 123ஆம் பாடலிலும் மாறோக்கத்து நப்பசலையார் இயற்றிய 126, 174 ஆம் பாடல்களிலும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரியும் கபிலரும்

திருமுடிக்காரியைப் பற்றிக் கபிலர் என்னும் புலவர்தாம் மிகுதியாகப் பாடியிருக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு ஆகிய நூல்களில் ஒன்பது பாடல்களில் கபிலர் காரியைப் பாடியுள்ளார். கபிலர் முதலிய புலவர்களால் காரியைப் பற்றிச் சங்க நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள், இந் நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் பகுதியில் ‘மலையமான் திருமுடிக்காரி’ என்னும் தலைப்பில் முன்பே தொகுத்துச் சொல்லப் பட்டுள்ளனவாதலின், அவற்றை மீண்டும் ஈண்டு விரிக்க வேண்டா. இருப்பினும், காரியின் வரையாத வள்ளல் தன்மையின் உயர் எல்லையைக் கபிலர் புகழ்ந்து பாடியுள்ள புறநானூற்றுப் பாடல்கள் (121, 122, 123, 124) நான்கினை மட்டும் முறையே ஈண்டுக் காண்போம்:


          “ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
          பலரும் வருவர் பரிசில் மாக்கள்
          வரிசை அறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே மாவண் தோன்றல்
          அதுநற் கறிந்தனை யாயின்
          பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே.”


          “கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
          கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே
          அழல்புறந் தரூஉம் அந்தண ரதுவே
          வியாத் திருவின் விறல்கெழு தானை
          மூவருள் ஒருவன் துப்பா கியரென
          ஏத்தினர் தரூஉம் கூழே நுங்குடி
          வாழ்த்தினர் வரூஉம் இரவல ரதுவே
          வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
          அரிவை தோளள வல்லதை
          நினதென இலைநீ பெருமிதத் தையே.”