பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறும் நாகரிகமும்

19


குறைத்தல், ஈரம் போக்குதல், முறுக்கு ஆற்றுதல் முதலிய பொருள்களும்; ஆறு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த ‘ஆற்றல்’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு, வலிமை, மிகுதி, முயற்சி, உறுதி, ஆண்மை, பொறை, ஞானம், வாய்மை, வெற்றி முதலிய பொருள்களும் உள்ளமை காண்க.

மேலே கூறியுள்ள பொருள்கள் யாவும் ‘ஆறு’ என்னும் சொல்லை வேராகக்கொண்டு எழுந்தவையே. இவ்வளவு பொருள்களையும் ‘ஆறு’ என்னும் ஒரு சொல்லால் குறிப்பிடுவதற்குத் தமிழ் மக்கள் எவ்வாறு கற்றுக் கொண்டிருப்பார்களெனில், ஓடுகின்ற ஆற்றைப் (நதியை) பார்த்துத்தான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

ஆறு என்னும் சொல்லுக்குரிய எல்லாப் பொருள்களையும் நல்வழி, தணிவு என்னும் இருபிரிவுக்குள் ஏறக்குறைய அடக்கிவிடலாம். ஆறானது நேராக ஒழுங்காக இடையறாது நல்வழியில் ஓடிக் கொண்டிருப்பதையும், அது தன் குளிர்ச்சியால் வெப்பத்தைத் தணித்தும் நீர் தந்து நீர் வேட்கையைத் தணித்தும், உணவுப் பொருள் விளைத்துப் பசி வறுமை ஆகியவற்றைத் தணித்துச் செல்வம் பெருக்கி உயிர்களைத் தாங்கிக் காத்தும் உடல் உடை முதலியவற்றைத் தூய்மை செய்வதற்குத் துணை புரிந்தும் போக்குவரவுக்குரிய வழிப்பாதையாகியும் தேவைக்கு மேற்பட்டு ஊரை அழிக்கக்கூடிய நிலையில் மிகுதியாகப் பெய்த மழைநீரைத் தன்னிடத்தே வாங்கிக் கொண்டு ஊருக்கும் வயல்களுக்கும் வடிகாலாகி ஊரையும் மக்களையும் கேட்டிலிருந்து விடுவித்தும் இன்னும் பல்வேறு வகைகளிலும் உதவிசெய்து கொண்டிருப்பதையும் கண்ட தமிழ் மக்கள், நல்வழியையும் நற்செயல்களையும் ஒழுங்குமுறையையும் உள்ளத் தணிவையும் ‘ஆறு’ என்னும் அழகிய அருமை அன்புப் பெயராலேயே அழைக்கலாயினர்.

‘ஆறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் ஆராயுங்கால், மற்றொரு செய்தி புலனாகிறது. பழங்கால மக்கள் போக்கு வரவுக்கு முதல் முதலில் ஆறுகளைத்தான் பயன்படுத்தினர், என்பதுதான் அந்தச் செய்தி.

ஆறுகளில் நிரம்பத் தண்ணீர் ஓடுகின்ற காலங்களில் மட்டுந்தானே படகு, தெப்பம் முதலியவற்றின் துணை கொண்டு போக்குவரவு செய்ய முடியும்? நிரம்பத் தண்ணீர் ஓடாத காலங்களிலும், மழை பெய்யும்போது தவிர மற்ற நேரத்தில் தண்ணீரே இல்லாத ஆறுகளிலும் எப்படிப் போக்குவரவு செய்ய முடியும்? மற்றும், ஆறுகள் இல்லாத பகுதிகளில் எவ்வாறு போக்குவரவு செய்தனர்?