பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

199


இப் பாடற் கருத்துக்களை எண்ணிப் பார்க்குங்கால் எத்துணை இன்பம் ஏற்படுகிறது! உள்ளத்தைத் தொட்டு உணர்ச்சிகளைக் கிளறும் இந்த இலக்கியச் சுவை நயத்தை என்னென்பது! இங்கே காரியின் கொடை மடத்தைப் புகழ்வதா! அல்லது கபிலரின் இலக்கியத் திறனைப் போற்றுவதா! அல்லது கெடிலக்கரை நாகரிகத்தைப் பாராட்டுவதா!

மலையமான் மக்கள்

‘சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழிக் கோவூர்கிழார் பாடி உய்யக் கொண்டது’ என்னும் அடிக் குறிப்புடைய பாடல் (46) ஒன்று புறநானூற்றில் உள்ளது. சோழன் கிள்ளி வளவனிடமிருந்து புலவர் கோவூர்கிழாரால் காப்பாற்றப்பட்ட சிறார்கள் மலையமான் திருமுடிக்காரியின் மக்களாகத்தான் இருக்க வேண்டும். இப் பாடலும், இப் பாடல் பற்றிய கருத்தும் முன்னர்க் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது காண்க. (பக்கம் : 141-142)

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்

புறநானூற்றில் மாறோக்கத்து நப்பசலையார் பாடியுள்ள 174ஆம் பாடலில் இம் மன்னனைப்பற்றி அறியலாம். இவனைப்பற்றி முன்னர்க் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் பகுதியில், ‘மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்’ என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டிருப்பது காண்க (பக்கம் : 143).

மூவர் தமிழ்

கெடிலக்கரைப் பகுதிகளோடு தொடர்புடையனவாகக் கிடைத்திருக்கும் நூல்களுக்குள் சங்க இலக்கியங்களுக்கு அடுத்தபடியாக, [1]ஔவையாரால் ‘மூவர் தமிழ்’ எனச் சிறப்பிக்கப்பெற்றுள்ள அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் தேவாரங்களை முறையே நிறுத்தலாம். தேவாரம் எனப்படுவது ஒரு பொருள் பற்றிய ஒரு தனி நூல் அன்று. தேவார ஆசிரியர் ஒவ்வொருவரும் இறைவன் திருக்கோயில் கொண்டுள்ள ஊர்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு ஒவ்வோர் ஊர்மேலும் பதிகம் பாடினர். பின்னர் இப் பதிகங்கள், அகநானூறு, புறநானூறு முதலிய சங்கத் தொகை நூல்களைப்போல ஒன்றாகத் தொகுக்கப் பெற்றுத் தேவாரம்


  1. நல்வழி - 40ஆம் பாடல்.