பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

கெடிலக்கரை நாகரிகம்


திருவந்தாதி என்னும் நூலில் (பா : 70),

“தமருள்ளந் தஞ்சை தலையரங்கந் தண்கால்
தமருள்ளுந் தண்பொருப்பு வேலை - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே
ஏவல்ல வெந்தைக் கிடம்”

எனக் கோவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

முதலாழ்வார்கள் எனப்படும் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் சேர்ந்து கோவலூரை வழிபட்ட வரலாறு சுவைமிக்கது. திருக்கோவலூரில் ஒரு வீட்டின் இடைகழியில் மூவருள் ஒருவர் ஒருநாள் இரவு முடங்கிப்ப்டுத்துக் கொண்டிருந்தார். மழை பெய்யத் தொடங்கியது. மற்றொருவர் ஓடி வந்தார். வந்தவரும் முடங்கிப் படுத்திருந்தவரும் உட்கார்ந்திருக்க மட்டும் அவ்விடம் போதியதாயிற்று. அந்த நேரம் மூன்றாமவர் வந்தார். அந்த இடத்தில் மூவர் உட்கார்ந்திருக்க முடியாது. எனவே, மூவரும் எழுந்து நின்று கொண்டிருந்தனர். ஒரே இருட்டு. அவ்வேளையில் மூவருக்கும் நடுவில் யாரோ ஒருவர் புகுந்து மூவரையும் நெருக்கித் தள்ளினார். மூவரும் நெருக்குண்டு திக்குமுக்காடினர். நெருக்கியவர் திருமால் என்று பின்னர் மூவரும் உணர்ந்து இறைவனை மெய்ம்மறந்து பாடித் துதித்தனர். பொய்கை யாழ்வார் பாடிய நூல் ‘முதல் திருவந்தாதி’ எனவும், பூதத்தாழ்வார் பாடிய நூல் ‘இரண்டாம் திருவந்தாதி’ எனவும், பேயாழ்வார் பாடிய நூல் ‘மூன்றாம் திருவந்தாதி’ எனவும் பெயர் கொடுக்கப்பட்டு, திவ்ய பிரபந்தத்துள் சேர்க்கப்பட்டுள்ளன. இம்மூவரும் கோவலூரில் இறைவனைப் பாடி வழிபட்டதை,

“பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவல் பாவலர்
பாதிநா ளிரவில்
மூவரும் நெருக்கி மொழிவிளக் கேற்றி முகுந்தனைத்
தொழுத நன்னாடு”

என்று வரந்தருவார் பாடியுள்ள பாரதச் சிறப்புப்பாயிரப் பாடற் பகுதியால் அறியலாம்.

இவர்தம் காலம் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியும் என்று சொல்லப்படுகிறது.

திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம்

கெடிலக்கரையிலுள்ள திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி யுள்ள சிவன்மேல் பாடப்பட்ட கலம்பக நூல் ‘திருப்பாதிரிப்