பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கெடிலக்கரை நாகரிகம்


[1]“அவ் ஆறு கடந்து அப்பால் அறத்து ஆறே
எனத் தெளிந்த அருளின் ஆறும்”

என்பது கம்பரின் பாடல் பகுதி. ‘ஆற்றுப்படை’ என்னும் நூற்பெயர்ப் பொருளும் கண்டு ஒப்புநோக்கற்பாலது. இதுகாறும் கூறியதிலிருந்து, ஆறுகள் மக்களிடத்தில் எவ்வளவு செல்வாக்குப் பெற்றிருந்தன என்பது புரியும்.

இம்மட்டுமா? கம்பர் ஒரு பாடலில், கோதாவரி ஆற்றுக்கு, பெரும்புலவர் இயற்றிய கவியினை ஒப்புமை கூறுமுகத்தான், ஆறுகளின் பெருமைகளையெல்லாம் - பயன்களையெல்லாம் தொகுத்துக் கூறிப் புகழ்ந்துள்ளார். ஆறுகள் கவிகளைப்போல நாட்டுக்கு நல்லழகாம்; சிறந்த பொருள்களைத் தருமாம்; புலங்களை (வயல்களை) வளப்படுத்துமாம்; அகத்துறைகளைக் (குளிக்கும் நீர்த்துறைகளைக் கொண்டிருக்குமாம்; முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை நெறியும் (ஐந்து நிலங்களின் வழியாய் வரும் ஓட்டத்தையும்) உடையனவாம்; தெளிந்திருக்குமாம்; குளிர்ந்திருக்குமாம்; ஒழுங்கான நடை உடையனவாம். இக்கருத்துடைய கம்பரது பாடல் வருமாறு:

[2]"புவியினுக்கு அணியாய், ஆன்ற
பொருள் தந்து, புலத்திற் றாகி,
அவி அகத் துறைகள் தாங்கி
ஐந்திணை நெறி அளாவி,
சவியுறத் தெளிந்து, தண்ணென்
ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா
வரியினை வீரர் கண்டார்."

நன்னூல் ஆசிரியர்கூட, நூற்பாவின் நிலைக்கு ‘ஆற்றொழுக்கு’ என்று பெயர் தந்துள்ளார்.

இத்துணை பெரும்புகழுக்குரிய ஆற்றங்கரை ஊர்களிலே மிக்க செல்வமும், சிறந்த கல்வியும் - கலைகளும், உயர்ந்த நாகரிகமும் தோன்றி வளர்ந்து பெருகித் திகழ்வதில் வியப்பேது! இந்நூலில் நாம் எடுத்துக் கொண்ட ‘கெடிலம்’ என்னும் ஆறு, இத்துணை பெரும் புகழுக்கும் மிகவும் உரியது என்று சொன்னால் மிகையாகாது.


  1. "கம்பராமாயணம் - கிட்கிந்தா காண்டம் - நாடவிட்ட படலம் - 22.
  2. "கம்பராமாயணம் - ஆரணிய காண்டம் - பஞ்சவடிப் படலம் - 1.