பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

கெடிலக்கரை நாகரிகம்


சார்ந்த பகுதியில் முந்திரி நன்றாய் விளைந்து, முந்திரிப் பயறு வாயிலாக அயல் நாட்டுச் செலாவணி பெற்றுத் தருகிறது. இம்மலையிலிருந்து உடைத்து எடுக்கப்படும் செந்நிறக்கற்கள் பாதை போடப் பயன்படுகின்றன.

இம்மலை வண்டிப் பாளையத்திற்கு அருகில் இருப்பதால் வண்டிப் பாளையம் மலை எனப் பண்டு வழங்கப்பட்டது. மற்றும் இம்மலையைச் சார்ந்து உள்ள ஊர்ப்பெயர்களாலும் அவ்வவ்வூர்ப் பக்கங்களில் அழைக்கப்பட்டு வந்தது. செம்மண் மலை - செங்கல் மலை என்றும் இதனைச் சொல்லுவதுண்டு. சில இடங்களில் இதனை மலை என்று சொல்லுவதினும் ஒரு மேட்டுநிலம் (பீடபூமி) என்று சொல்லலாம். இதன்மேல் நிலக்கடலை முதலிய பயிர்வகைகள் விளைவிக்கப்படுகின்றன. பிரான்சிஸ் கேப்பர் (Francis Capper) என்னும் ஆங்கிலேயப் படைத்தலைவர் ஒருவர் 1796 ஆம் ஆண்டு கடலூருக்கு அண்மையில் இம்மலையில் ஒரு பகுதி பெற்று அதில் மாளிகையும் கட்டிக்கொண்டார்; அதிலிருந்து இம்மலை ‘கேப்பர் மலை’ என அழைக்கப்படுகிறது. இம் மாளிகை 1815இல் அரசாங்கத்துக்கு உரியதாயிற்று. இப்போது இதில் மாவட்டச் சிறைச்சாலையும் நுரையீரல், நோய்த் தடுப்பு நிலையமும் உள்ளன. சிறைச்சாலையில் சமுக்காளம் முதலிய உருப்படிகள் நெய்யப்படுகின்றன. கூடலூருக்குத் தெற்கே இம்மலையடிவாரத்தில் கேப்பர் குவாரி என்னும் பெயரில் புகைவண்டி நிலையம் ஒன்று உள்ளது. மலைக்கற்களை ஏற்றிச் செல்வதற்கு இந்நிலையம் பெரிதும் பயன்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த ஆங்கில பிரெஞ்சுப் போரில் இந்த மலை சிறப்பிடம் பெற்றிருந்தது. இந்த மலைக்காற்றும் நீரும் மூலிகைகளும் பைத்திய நோயைப் போக்குவதாகச் சொல்லப்படுகிறது.

வயல் வளம்

மருதம் எனப்படும் வயல் வளம் கெடில நாட்டில் போதுமான அளவு உள்ளது. கெடிலம் ஓடுமிடமெல்லாம் நிலம் வளங்கொழிக்கின்றது. வழியிலுள்ள அணைகளால் வயல்கள் பெரும்பயன் பெறுகின்றன. கெடிலக் கரைப்பகுதிகளிலுள்ள நன்செய் வயல்கள் மிக்க விலைப்பெறுமானம் உடையவை. கெடிலக்கரை நிலவளத்தைப் பற்றிக் கெடிலக்கரை இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் முற்றிலும் உண்மையே. எந்தப் பகுதியில் பழம்பெருந் திருக்கோயில்களும் அரசர் தலைநகர்களும் மிக்குச்சிறந்து இருக்கின்றனவோ அல்லது இருந்தனவோ, அந்தப் பகுதியை வளம் நிறைந்த பகுதியெனக் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம்.