பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடில நாட்டு வளங்கள்

241


கெடிலக்கரையில் பாடல் பெற்ற பழம் பெரும்பதிகள் பல உள்ளன. மற்றும், திருக்கோவலூர், கிளியூர், ஆற்றுார், சேந்தமங்கலம், திருநாவலூர், திருவதிகை, திருமாணிகுழி. கடலூர் முதலிய ஊர்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு அரச மரபினர்கட்குத் தலைநகரங்களா யிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று கெடிலக்கரை நிலங்களில் சோற்றுக்கு நெல் விளைவதன்றி, கரும்பும் நிலக்கடலையும் நிறைய விளைந்து வெளிநாட்டுப் பணத்தைத் தருவிக்கின்றது என்பதை மறந்து விடுவதற்கில்லை.

கடல் வளம்

நெய்தல் எனப்படும் கடல் வளமும் ஒரளவு இங்கே உண்டு. கெடிலம் கடலோடு கலப்பதோடு அமைந்து விட்டிருந்தால் அவ்வளவு சிறப்பிருக்காது. கலக்குமிடத்தில் இயற்கைத் துறைமுகமும் அமைந்திருப்பதால்தான் கடல்வளம் இருப்பதாகச் சொல்ல முடிகிறது. மீன் பிடித்தல், உப்பளம் அமைத்து உப்பு எடுத்தல், படகு கட்டுதல், படகு ஒட்டுதல், ஏற்றுமதி - இறக்குமதி செய்தல், கப்பல் பயணம் செய்தல், கடல் வாணிகம் புரிதல் முதலிய நெய்தல் நிலத் தொழில்கள் பலவும், கெடிலம் கடலோடு கலக்கும் கடலூரில் நடைபெறுகின்றன. கூடலூர்த் துறைமுகம் மீன்பிடி துறைமுகமாகவும் இருந்து மீன்வளம் கிடைக்கச் செய்வது குறிப்பிடத்தக்கது.

நீர் வளம்

நீர்வளம் - நிலவளம் என்பார்கள். இதுவரையும் நானில (நான்கு நில) வளங்கள் விளக்கப்பட்டன. நானில வளங்கள் பெருகுவதற்கு நீர்வளம் இன்றியமையாதது. அதற்கு மழைவளம் வேண்டும். தென்னார்க்காடு மாவட்டத்தில் ஆண்டுக்குச் சராசரி 1270 மில்லி மீட்டர் மழை பெய்கிறது; கடற்கரையை ஒட்டியுள்ள கடலூர் வட்டத்தில் ஆண்டுக்குச் சராசரி 2000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. சராசரி ஆண்டுக்கு 55 நாள்கள் மழை பெய்கிறது எனலாம். இப்பகுதியில் பெரும்பான்மை மழை வடகிழக்குப் பருவக் காற்றால் பெய்கிறது.

இவ்வட்டாரத்தில், புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மூன்று திங்கள்களும் மழைக்காலமாகும்; மார்கழி, தை, மாசி ஆகிய மூன்றும் பனிக்காலமாகும்; பங்குனி பனிக்காலத்திற்கும் கோடைக் காலத்திற்கும் இடைப்பட்ட தரத்தது; சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மூன்றும் கோடைக்காலமாகும்; ஆடி, ஆவணி ஆகிய இரண்டும் கோடைக் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் இடைப்பட்ட நிலையுடையவை.