பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

கெடிலக்கரை நாகரிகம்


அணையின் வாயிலாகத் திருக்கோவலூர்ப் பகுதியை வளப்படுத்துவதாலும், திருக்கோவலூரின் பெருமைகள் அனைத்திலும் பெண்ணையாற்றைப் போலவே கெடிலத்திற்கும் பங்கு உண்டு. இந்த இரண்டு ஆறுகளும் பக்கத்தில் பக்கத்தில் இருப்பதால், கெடிலக்கரை நாகரிகத்தைப் பெண்ணைக்கரை நாகரிகமாகவும் பெண்ணைக்கரை நாகரிகத்தைக் கெடிலக் கரை நாகரிகமாகவும் கொள்வதால் தவறொன்றுமில்லை.

ஒரு கல்வெட்டு கெடிலத்தையும் பெண்ணையையும் இணைத்து முடிச்சு போட்டுள்ளது. திருக்கோவலூர் - கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் 1446 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட விசயராய மகாராயரது கல்வெட்டின் இறுதியில், இரண்டாற்றுக்கு நடு உடைய நாட்டார் எழுத்து’ என்னும் கையெழுத்துத் தொடர் உள்ளது. இங்கே இரண்டாறு எனச் சுட்டப்பட்டிருப்பவை கெடிலமும் பெண்ணையுமே. இரண்டாற்றுக்கு நடு உடைய நாட்டார்’ என்றால், இரண்டு ஆறுகளுக்கும் நடுவில் உள்ள பகுதியில் வாழ்பவர்கள் என்பது பொருள். இரண்டு ஆட்டில் ஊட்டின குட்டி என்பார்கள்; இவர்களை இரண்டு ஆற்றில் ஊட்டின குட்டிகள் என்று சொல்லலாம்.

கெடிலமும் பெண்ணையும் தனித்தனி ஆறுகளாய்த் தத்தம் போக்கில் சென்று தனித்தனியே கடலில் கலக்கினும், இடையில் ஒரு பகுதியில் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. திருக்கோவலூருக்குக் கிழக்கே சிறிது தொலைவில் பெண்ணையாற்றின் வலப்பக்கத்திலிருந்து மலட்டாறு என்னும் ஒரு சிற்றாறு பிரிந்து திருக்கோவலூர் வட்டத்தைக் கடந்து கடலூர் வட்டத்துள் புகுந்து அப்பர் பிறந்த திருவாமுருக்கு அண்மையில் கெடிலத்தோடு கலந்துவிடுகிறது. இந்த வகையில் கெடிலமும் பெண்ணையும் உடல் தொடர்புடைய உறவினர் போல் நெருக்கம் உடையனவாயுள்ளன. இந்தக் கூட்டுறவால் பெண்ணைக்குப் பெருமையில்லை - கெடிலத்திற்கே பெருமை! ஆம் பெண்ணையின் பகுதி ஒரு துணையாறாகிக் கெடிலத்தோடு கலப்பதால் கெடிலத்திற்கே பெருமை!

உருவினால் பெரியவள் என்றாலும் பெண்ணைக்காரி வந்தவள், கெடிலக்காரியோ, பிறந்தவள். திருக்கோவலூர் ஒன்றினால் மட்டும் பெண்ணைக்காரி சிறந்தவள்; பல ஊர்களால் கெடிலக்காரி சிறந்தவள். நீர்ப்பாசனச் சிறப்போடு பெண்ணைக்காரி நின்று விடுகிறாள்; கெடிலக் காரியோ, நீர்ப்பாசனத்துடன், தன் கரையில் பெரியார்கள் பிறந்தமை, தொழில் துறை, வாணிகம், துறைமுகம் முதலிய பல்வேறு சிறப்புகளுடனும் பொலிந்து திகழ்கிறாள். சமயத்துறையிலும் பெண்ணைக்காரியினும் கெடிலத்தாளே பெரியவள்; அப்படியிருந்தும் ‘பெத்த பேர்’ பெண்ணைக்கே.