பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

கெடிலக்கரை நாகரிகம்


உண்டு. இங்கே உள்ள குறுக்குப் பாறைமேல் 1953 ஆம் ஆண்டு சுவர் எழுப்பப்பட்டு உயரமாகச் செயற்கை அணை கட்டப்பட்டது. அதனால் இவ்வணை மற்ற அணைகளினும் மிகவும் உயரமாய்த் தோற்றமளிக்கிறது. அணைக்கு மேற்புறம் ஆற்றின் இருபக்கமும் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக 519 ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி கிடைத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாசனத்தால் அந்த வட்டாரத்து வயல்கள் மிகவும் செழிப்பாக உள்ளன.

3. திருவதிகை அணை

அடுத்தாற்போல் கடலூர் வட்டத்திற்குள் புகுவோமானால் திருவதிகை அணையைச் சந்திக்கலாம். கடலூருக்கு மேற்கே 21 கி.மீ (13 கல்) தொலைவில், திருவதிகை என்னும் ஊருக்குக் கீழ்பால் 1847 - 1848 ஆம் ஆண்டு காலத்தில் இது கட்டப்பட்டது. அதற்குமுன் அங்கே களிமண் அணையே இருந்தது. அதை அகற்றி இந்த அணை கட்டப்பட்டது. முதலில் 443 அடி நீளமே கட்டப்பட்டிருந்தது. பின்னர் மேலும் நீட்டப்பட்டு இப்போது 523 அடி நீளம் உடையதாகத் திகழ்கிறது. அணைக்கு மேற்புறம் ஆற்றின் வடகரையிலிருந்து கால்வாய் பிரிந்து சென்று பல ஊர்களுக்குப் பாசன வசதி செய்கிறது. பெரிய கால்வாயிலிருந்து பல கிளைக் கால்வாய்கள் பிரிந்து அந்தப் பகுதி நெடுகிலும் ஊடுருவிச் செல்கின்றன. அந்தப் பகுதியில், மேல் பட்டாம் பாக்கம் என்னும் ஊரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிற்குள் உள்ள பாலூர்ப் பக்கம் வரவேண்டுமானால், இடையே பன்னிரண்டு வாய்க்கால்களில் ஏறி இறங்கவேண்டும். அண்மையில்தான் இந்த வாய்க் கால்களின் மேலே பாலங்கள் கட்டப்பட்டன.