பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாசனமும் பயிரும்-அணைக்கட்டுகள்

253


பெயர் சொல்வார்கள். பெரும்பாலும் ஏற்றம் உள்ள இடங்கட்கு கீழ்பால் கொண்டம் போடுவதால், தேங்குகிற நீர் ஏற்றப் பாதையின் வழியாக வழக்கம் போல் சென்று நிலத்தில் பாயும். ஏற்றம் இறைத்துத் தொல்லைப்படும் உடலுழைப்பினைக் குறைக்கும் மாற்று முயற்சியே இது. இம்முறையில் இரவு முழுவதும் நீர் பாய்ச்சப்படும், பின்னர் வைகறையில் கொண்டத்தை எடுத்து விடுவார்கள். இவ்வாறு கொண்டம் போடுதல் அடிக்கடி நடைபெறாது. எப்போதோ ஒருவேளை உரியவரிடம் ஒப்புதல் பெற்றே செய்யப்படும். மற்ற வேளைகளில் ஏற்றமே பயன்படுத்தப்படும். மிகுந்த மேடான பகுதிகளில் இரட்டை ஏற்றமும் (இரண்டு ஆட்கள் மிதிப்பது), மேடுகுறைவான இடங்களில் ஒற்றை ஏற்றமும் (ஒராள் மிதிப்பது) பயன்படுத்தப்படும்.

பிற பாசனங்கள்

கெடிலக்கரைப் பகுதிகளில் பெரும்பாலும் ஆற்றுப் பாசனமே நடைபெறுகிறது. பெண்ணையாறு பக்கத்தில் இருப்பதால் அந்த ஆற்றுப் பாசனமும் சில இடங்களில் கெடிலக் கரை ஊர்கட்குப் பயன்படுகிறது. ஆற்றுப் பாசனமேயன்றி, சில இடங்களில் சிறுபான்மை ஏரிப்பாசனம், ஊற்றுக் கால்வாய்ப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகியவையும் நடைபெறுகின்றன.

பயிர் வகைகள்

கெடிலக்கரை நாட்டில் நெல், கரும்பு, மணிலா, கம்பு, கேழ்வரகு, எள், உளுந்து, காராமணி, மிளகாய், தென்னை, முந்திரி, மா, பலா, வாழை, வெற்றிலை, பருத்தி, சவுக்கு, ஆமணக்கு, அவுரி, முதலியவை பெரிய அளவிலும் சிறிய அளவிலுமாகப் பயிரிடப்படுகின்றன. மற்றப் பகுதிகளிலுள்ள பல்வேறு காய் கனி கிழங்கு கீரை வகைகளும் இங்கே உண்டு.

இந்தப் பகுதியில் பெரும்பாலும் இருபோகமே உண்டு. முப்போகம் மிகமிகக் குறைவு. அணை உள்ள பகுதிகளில் சில இடங்களில் இரு போகமும் நெல்லும், சில இடங்களில் ஒரு போகம் நெல்லும் - இன்னொரு போகத்தில் ஏதேனும் புன்செய்ப் பயிரும் விளைவிக்கப் படுகின்றன. கரைக்குத் தொலைவான இடங்களில் இரு போகமுமே புன்செய்ப் பயிர்கள் செய்யப்படுகின்றன.

நெல்

நெல் கடலூர் வட்டத்தில் சிலவிடங்களில் இருபோகமும் செய்யப்படுகிறது; மேற்குப் பகுதிகளில் ஒரு போகம் செய்யப்