பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

கெடிலக்கரை நாகரிகம்


படுகிறது. மொத்தத்தில் கெடில நாட்டில் சிறு மணி செங்கற்பட்டு சிறுமணி, பட்டரை சம்பா, கிச்சிலி சம்பா, ஒட்டு கிச்சிலி, குதிரைவால், கம்பன் சம்பா, சீரக சம்பா, சீவன் சம்பா, கோயமுத்துார் சம்பா, வையக் கொண்டான், கல்ச்சர். ஒட்டு கல்ச்சர், சொர்ணவாரி, பூம்பாளை, கார், பூங்கார், வெள்ளைக்கார், கருடன் சம்பா, வாடன் சம்பா, கலிக்கன் சம்பா முதலிய நெல் வகைகள் பல்வேறிடங்களிலும் பயிர் செய்யப்படுகின்றன. இத் துறையில் பாலூர் ஆராய்ச்சிப் பண்ணை உழவர்கட்கு உறுதுணையாயுள்ளது.

கரும்பு

கெடிலக் கரைக்குச் சிறிது தொலைவில் நெல்லிக் குப்பம் என்னும் ஊரில் ஒரு பெரிய கரும்பு ஆலை இருப்பதைக் கொண்டு இந்தப் பகுதியின் கரும்பு விளைச்சலைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை பாரி கம்பெனி நிறுவனத்தது; எட்வர்டு காம்ப்பல் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அவர் திருவெண்ணெய் நல்லூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலும் ஆலைகள் நிறுவிக் கரும்பு விளைச்சலுக்கு வழி செய்தார். ஆயினும், நெல்லிக்குப்பம் ஆலையொன்றே அழியாமல் பெருவளர்ச்சி பெற்றுப் பேர் சொல்லுகிறது. பல்லாண்டுகட்கு முன் வண்டிப்பாளையம் என்னும் ஊரில் கூட ஒரு சிறு கரும்பு ஆலை இருந்து மறைந்து போயிற்று. கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையாகிய வில்வராயநத்தம் என்னும் சிற்றுாரில் பாரத அரசின் கரும்புப் பண்ணை ஒன்று இப்போது செயல்பட்டு வருகிறது. இத்தகைய அமைப்புகள் எல்லாம் கெடிலக்கரையின் கரும்பு விளைச்சலைப் பற்றிச் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன. கரும்பு பயிரிட்டதால் பணக்காரரானவர் பலர் இப்பகுதியில் உளர்.

மணிலாக் கொட்டை

தென்னார்க்காடு மாவட்டத்தை ‘மல்லாகொட்டை ஜில்லா’ என்று கேலி செய்வது வழக்கம். மல்லாகொட்டை என்பது மணிலாக்கொட்டை என்பதன் திரிந்த கொச்சை உருவம். இதனை வேர்க்கடலை, நிலக்கடலை, கடலைக்காய் என்றும் அழைப்பர். மணிலா விளைச்சலில் உலகிலேயே இந்தியாதான் மிக்கது; இந்தியாவில் தமிழகம் மிக்கது: தமிழகத்தில் தென்னார்க்காடு மாவட்டம் மிக்கது. இம் மாவட்டத்தில் ஒரு தோற்றம் நான்கு நூறாயிரம் (4 இலட்சம்) ஏக்கர் நிலத்தில், இரண்டு நூறாயிரம் (2 இலட்சம்) டன் மணிலா