பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

கெடிலக்கரை நாகரிகம்


சென்னைக்கு 185 கி.மீ (114 மைல்) தொலைவில், திருநாவலூரை அடுத்துள்ள சேந்தமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் கெடிலத்தைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் அழகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது வன்மையானது; இருபக்கங்களிலும் இரும்புச் சுவர் உடையது. இந்தப் பாலம் இல்லையெனில் நாட்டு நெடுஞ்சாலை இல்லை. நாட்டின் நெடுஞ்சாலையின் இன்றியமையாமையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. எனவே, கெடிலத்தின் பாலங்களுக்குள் இந்தப் பாலமே மிகமிக இன்றியமையாததென்பது போதரும்.

கடலூர் வட்டத்தில்

பன்னுருட்டிக்கு அருகில் (பாலம்)

விக்கிரவாண்டி - விழுப்புரம் பக்கத்திலிருந்து தெற்கு நோக்கிக் கடலூர் வட்டத்தில் பண்ணுருட்டி - காடாம்புலியூர் வழியாக நெய்வேலிப் பக்கம் செல்லும் விக்கிரவாண்டி லோயர் அணைக்கட்டு ரோடு என்னும் மாவட்ட நெடும்பாதை ஒன்று, பண்ணுருட்டிக்கு அருகில் கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே பாலம் இல்லாதிருந்தது பெருங்குறையாயிருந்தது. அக்குறை 1962 ஆம் ஆண்டு போக்கப்பட்டது. இப்பக்கத்திலிருந்து நெய்வேலிக்குச் செல்ல வேண்டிய ஊர்திகள், பாலம் இல்லாத போது கடலூரைச் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு பண்ணுருட்டிப் பகுதிக்கு, நெய்வேலி நகர் விரிவுப் பகுதி மிகவும் நெருக்கத்தில் வந்து விட்டது. நெய்வேலி நிலக்கரித் திட்டத்திற்கு இப் பாலம் பெரும்பயன் விளைப்பதாகும். தென்பகுதியில் இருந்து சென்னைக்குச் செல்லும் ஊர்திகளும் சிதம்பரம் - கடலூர் வழியாகச் சுற்றிக்கொண்டு செல்லாமல், நெய்வேலி பண்ணுருட்டி வழியாகச் சென்று தொலைவை மிச்சப்படுத்திக் கொள்வதற்கும் இப்பாலம் பேருதவி புரிகிறது.

பாலூர்ப் பக்கத்தில் (பாலம்)

பண்ணுருட்டிக்கும் கடலூருக்கும் நடுவில் உள்ள பாலூர் என்னும் ஊரிலிருந்து புறப்பட்டு, நடுவீரப்பட்டு வழியாகத் தெற்கு நோக்கிச் செல்லும் மாவட்டக் குறும்பாதை ஒன்று, புறப்படும் இடத்திற்கு அண்மையிலேயே பாலூருக்குப் பக்கத்திலேயே கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே 1965 ஆம் ஆண்டில்தான் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாதை தெற்கு நோக்கிக் குறிஞ்சிப்பாடி வரையும் சென்று, கடலூரிலிருந்து குறிஞ்சிப்பாடி - நெய்வேலி வழியாக விருத்தாசலம் செல்லும் மாவட்ட நெடும் பாதையில் (குறிஞ்சிப்பாடிக்கு அருகில்) கலந்துவிடுகிறது.