பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

கெடிலக்கரை நாகரிகம்


கடக்க உதவும் மாவட்ட நெடும் பாதை, கடலூர் நகருக்கு நடுவண் உள்ள கெடிலத்தின் பாலத்தின் மேல்தான் செல்கிறது. மற்றும், நெய்வேலி வழியாக விருத்தாசலம் - கடலூர்த் தலைநகர்ப் பகுதியிடையே பயணம் செய்பவர்களும் இப் பாலத்தைக் கடந்தே செல்ல வேண்டும். எனவே, போக்குவரவுப் பயனில் இந்தப் பாலம் மிக்க இன்றியமையாமை உடையது என்பது தெளிவு.

இந்தப் பாலத்தில் இரும்பு மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலத்தின் இரு பக்கங்களிலும் உள்ள சுவர் இரும்பால் ஆனது. இதில் காலையிலும் மாலையிலும் நெரிசல் மிகுதியாக இருக்கும். அந்நேரத்தில் இப்பாலத்தைக் கடப்பதில் மிக்க விழிப்புத் தேவை. இதற்காகச் சில ஆண்டுகட்கு முன், இந்தப் பாலத்தின் இருமருங்கிலும் நடப்பவர்கட்கெனத் தனியே நடை பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் இதன் நெரிசல் மிகுதி விளங்கும்.

மேலுள்ளது, கடலூர் நடுவண் உள்ள கெடிலப் பாலம். ஆற்றின் கிழக்குக்கரையில் பாலத்தின் தென்புறம் இருந்து கொண்டு எடுத்த படம் இது. இதை எடுத்த நேரம் நடுப்பகல்; ஆதலால் பாலத்தில் போக்குவரவு நெரிசல் காணப்படவில்லை. படம் எடுத்த நாள் 7-1-1967 ஆகும்.

இந்தப் பாலத்தின் தென்பக்கத்தில், சிதைந்து போன சிறிய பாலம் ஒன்று தரை மட்டத்திற்குச் சிறிது உயரமாக இருக்கக் காணலாம். படத்தில் இப்போது தெரிகிற பெரிய பாலம் கட்டுவதற்கு முன் இருந்த பழைய பாலம் இது 7-1-1967 ஆம் நாளைய நிலவரம் இது.

சிதைந்து காணப்படும் இந்தப் பழைய பாலம் இப்போது (1970) புதிய பாலமாகவும் - பெரிய பாலமாகவும் மாற்றப் பட்டுள்ளது. இதை நோக்க, படத்தில் தெரியும் பெரிய பாலம் இப்போது (1970) சிறிய பாலமாகவும் பழைய பாலமாகவும் காணப்படுகிறது. அஃதாவது சிதைந்து போன சிறிய பழைய பாலம் உள்ள இடத்தில், 30,00,000 (30 இலட்சம்) ரூபாய் செலவில் ஒரு பெரிய அகலமான புதிய பாலம் கட்டப்பட்டு 1969 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதற்கு ‘அண்ணா பாலம்’ என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மிகவும் அகலமாக இந்தப் பாலம் கட்டப்பட்டிருப்பதால், ஊறு இன்றிப் போக்குவரவு செம்மையாய் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதி தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராயிருப்பதன்றி, நெய்வேலித் திட்டத்திற்கு அருகில் இருப்பதையும் கெடிலத்தின்