பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

கெடிலக்கரை நாகரிகம்


போக்குவரவு, அரசின் சென்னை - தஞ்சாவூர் பேருந்து போக்குவரவு முதலியன கடலூர் வழியாக நடைபெறுகின்றன. கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே கால் மணி நேரம் - அரைமணி நேரத்திற்கு ஒரு முறை வண்டி உண்டு. பண்ணுருட்டிக்கும் கடலூருக்குமிடையே சிமிட்டியால் போடப்பட்டுள்ள மாநில நெடுஞ்சாலையில் (State Highways) பேருந்து வண்டி, பேருந்து சுமை வண்டி (லாரி), மாட்டு வண்டி, முதலியவற்றின் நெரிசல் மிகுதி. இங்கே அடிக்கடி ஊறுகள் (விபத்துகள்) நேர்வதும் உண்டு. காரணம்: பண்ணுருட்டியும் கடலூரும் பெரிய வணிக நிலையங்களாக இருப்பதும், இரண்டிற்கும் இடையே நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை இருப்பதும் ஆகும். இந்தப்பகுதியில் கரும்பு ஏற்றிக் கொண்டு வரும் பேருந்துகளும் மாட்டு வண்டிகளும் மிகுதி.

கடலூர் வட்டத்தில் கடலூரிலும் நெய்வேலியிலும் அகநகர்ப் பேருந்து (டவுன் பஸ்) வசதி உண்டு.

புகைவண்டிப் பாதைப் பாலங்கள்

சேந்தமங்கலம் அருகில்

சென்னைப் பக்கத்திலிருந்து திருச்சி வழியாகத் தென் பகுதிக்குச் சென்று கொண்டிருக்கும் பெருநாட்டு நெடுஞ்சாலை (National Highways) சென்னைக்கு 185 கி.மீ. தூரத்தில் சேந்தமங்கலம் என்னும் ஊடுக்கருகில் கெடிலத்தைக் கடப்பதாகவும் அங்கே ஒரு தரைவழிப்பாலம் கட்டப் பட்டிருப்பதாகவும் பார்த்தோமே அந்தப் பாலத்திற்கு மேற்கே மிக அண்மையில் கெடிலத்தின் குறுக்கே புகைவண்டித் தொடர்ப்பாலம் இருக்கிறது. தரைவழிப்பாலத்தில் நின்று கொண்டு பார்த்தால், புகைவண்டித் தொடர்ப்பாலம் நன்றாகத் தெரியும். சென்னைப் பக்கத்திலிருந்து புகைவண்டித் தொடர்ப் பாதையும் தரைவழி நெடுஞ்சாலையும் பக்கத்தில் பக்கத்தில் ஒன்றையொன்று தொட்டுக் கொள்வது போல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புகைவண்டித் தொடர்ப் பாதை சேந்தமங்கலத்திற்கு மேற்கே சிறிது தொலைவில், விழுப்புரம் விருத்தாசலம் பாதையிலுள்ள பரிக்கல் (Station) நிலையத்திற்கும் பாதுார் நிலையத்திற்கும் நடுவே கெடிலத்தைக் கடக்கிறது. இங்கே உள்ள பாலம் கெடிலத்தின் குறுக்கே உள்ள புகைவண்டிப் பாலங்கள் இரண்டனுள் முதலாவதாகும். இரண்டாவது கடலூர் அருகே உள்ளது.