பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போக்குவரவு-பாதைகளும் பாலங்களும்

267


சந்திப்பிலிருந்து புறப்பட்டுத் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டிய வண்டிகளும் கூடலூரிலிருந்து வடக்கு நோக்கித் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்துதான் பிறகு ஒரு முறை கூடலூரை அடைந்து பின்னர்த் தெற்குநோக்கிச் செல்லும். இதிலிருந்து திருப்பாதிரிப் புலியூர் நிலையத்தின் இன்றியமையாமை பெரிதும் புலப்படும்.

கூடலூரிலிருந்து புதுச்சேரிக்குக் கால் மணி நேரம் - அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து வண்டிபோகியும், இட நெருக்கடி மிகுதியாயுள்ளது. இந் நெருக்கடியைக் குறைக்கவேண்டுமாயின், கூடலூர்ச் சந்திப்பிலிருந்து புதுச்சேரிக்குப் புகைவண்டி விடவேண்டும். அவ்வாறு இந் நாள்வரை விடப்படாமைக்குக் காரணம், கடலூருக்கும் புதுச்சேரிக்கும் இடையே பல ஆறுகள் இருப்பதே. பொருட் செலவைப் பொருட் படுத்தாமல் இந்த ஆறுகளின்மேல் பாலங்கள் கட்டிப் புகைவண்டிப் பாதை அமைத்தால், இந்தப் பகுதி மக்கள் பெரும்பயன் எய்துவர்.

கெடிலக்கரைப் பகுதிகளிலுள்ள புகைவண்டிப் பாதைகள். 3 அடி 3 3/8 அங்குலம் அகலங்கொண்ட குறுகிய ‘மீட்டர் கேஜ்’ (Metre Gauge) பாதைகளே.

நீர்வழிப் போக்குவரவு

படகு

கூடலூரில் துறைமுகம் இருக்கும் கெடிலக் கிளையாகிய உப்பனாற்றிற்கும் கடலுக்கும் இடையே ஒரு தீவு உள்ளது. அத்தீவை அக்கரை என்று இக்கரையில் உள்ளவர் அழைப்பர். அந்த அக்கரைத் தீவில் கோரி, சிங்காரத் தோப்பு முதலிய சிற்றுார்கள் உள்ளன. கூடலூருக்கும் அக்கரைத் தீவிற்கும் இடையேயுள்ள உப்பனாற்றின் அகலம் ‘முக்கால் பர்லாங்கு’ இருக்கும். ஆற்றைக் கடந்து அக்கரைக்கும் இக்கரைக்கும் சென்றுவரப் படகுப் போக்குவரவு நடை பெறுகிறது. படகு என்றால் ஒன்று - இரண்டு அல்ல; ஆறு படகுகட்குமேல் பயன்படுத்தப் படுகின்றன. பள்ளிச் சிறார்கட்கும் நகராட்சி அலுவலர்க்கும் கட்டணம் இல்லை; ஏனையோர் பணங் கொடுத்தே படகுகளில் பயணஞ் செய்ய வேண்டும்.

கப்பல்

இந்தியக் கிழக்குக் கடற்கரையிலுள்ள சிறிய துறை முகங்களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகம்.