பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கெடிலக்கரை நாகரிகம்


என்றபடி, கெடிலம் உருவத்தில் - நீளத்தில் - சிறியதாயிருப்பினும், நீர்ப்பாசனப் பெருமை, அணைக்கட்டுப் பெருமை, துறைமுகப் பெருமை, போக்குவரவுப் பெருமை, வாணிகப் பெருமை, மண்வளப் பெருமை, பண்ணைப் பெருமை, தொழில் பெருமை, ஊர்ப் பெருமை, தலைநகர்ப் பெருமை, மலைப் பெருமை, கடல் பெருமை, மக்கள் பெருமை, அரசியல் பெருமை, ஆட்சிப் பெருமை, கோயில் பெருமை, நீராடல் பெருமை, பாடல் பெருமை, இலக்கியப் பெருமை, கல்விப் பெருமை, கலைப் பெருமை, வரலாற்றுப் பெருமை, நாகரிகப் பெருமை முதலிய அனைத்துப் பெருமைகளும் பெற்று மிளிரும் ஓர் உயிர்ப்பு உள்ள (சீவநதி) ஆறு ஆகும்.

மிசிசிப்பி ஆற்றையும் நைல் ஆற்றையும் உலகத்தார்க்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. கங்கையைப் பற்றியோ, பிரம்மபுத்திராவைப் பற்றியோ இந்தியர்க்கு எடுத்துரைக்க வேண்டியதில்லை. காவிரியையோ பெண்ணையாற்றையோ தமிழ்மக்கட்கு அறிமுகம் செய்யவேண்டியதில்லை இவ்வாறுகள் எல்லாம் பரவலாக விளம்பரம் பெற்றிருப்பவை, ஆனால், பல்வகைச் சிறப்புக்கள் நிறைந்தும் இருக்குமிடம் தெரியாமல் அடக்கமாய்த் தன்பணியை ஆற்றிக்கொண்டிருக்கிற கெடிலம் ஆற்றைத் தமிழ்மக்கட்கு - உலகினர்க்கு விரிவாக அறிமுகம் செய்யாதிருப்பது தவறாகும். எனவே, தமிழக ஆறுகட்கிடையே கெடிலத்தின் நிலையை ஆய்ந்து கண்ட நாம், உலக ஆறுகட்கிடையே கெடிலத்தின் நிலையையும் ஆய்ந்து அதன் தகுதியைக் கணித்து மதிப்பிட வேண்டும்.

உலக ஆறுகளுள் கெடிலம்

குறுகிய தொலைவே ஓடும் கெடிலம், ஏறக்குறைய 70கல் (112கி.மீ.) நீளமே உடையது. உலக ஆறுகளை நோக்கக் கெடிலத்தின் நீளமும் நீர்வசதியும் மிகமிகக்குறைவு என்பது பின் வரும் அட்டவணையால் புலனாகும். அட்டவணையில் முதலில் ஆறுகளின் பெயர்களும், அடுத்து அவற்றின் நீளமும் (மைல் கணக்கில்), பின்னர் அவை பாயும் வடிகால் நிலங்களின் பரப்பும் (சதுரமைல் கணக்கிலும் ஏக்கர் கணக்கிலும்), இறுதியாக அவற்றின் சராசரி ஒழுக்கும் முறையே கொடுக்கப்படும். அட்டவணையைத் தொடர்ந்து, கெடிலத்தின் பெருமையை நிலைநாட்டு முகத்தான் ஒருசிறிய ஆராய்ச்சியும் செய்யப்படும். இனி, ஆறுகளின் அட்டவணை வருமாறு: