பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடலூர்த் துறைமுகம்

271


மிதந்து கொண்டிருக்கும். தரையிலிருந்து பாலத்தின் வழியாகச் சரக்குகளைக் கொண்டுசென்று படகுகளில் ஏற்றுவர். படகுகள் அவற்றைத் தொலைவில் நிற்கும் கப்பல்களில் கொண்டுபோய் ஏற்றும். அதேபோல் கப்பல்களிலிருந்து சரக்குகள் படகுகளின் வழியாகப் பாலத்தை யடைந்து பின்னர்த் தரைக்குக் கொண்டு வரப்படும். இந்தப் பாலத்திலிருந்து அண்மையிலுள்ள புகைவண்டி நிலையத்திற்குப் புகைவண்டிப் பாதை இணைப்பு இருப்பதும் உண்டு.

இவற்றினும் கூடலூர்த் துறைமுகம் வேறுபட்டது. இத் துறைமுகத்தில், மணலிலிருந்து படகுகளை வலிந்து ஒட்டிச் சென்று கப்பல்களை யடையவேண்டியதில்லை. செயற்கைத் துறைமுக அமைப்பான கடற் பாலமும் இங்கே கிடையாது தேவையும் இல்லை. கூடலூர்த் துறைமுகம் ஒர் இயற்கைத் துறைமுகமாகும். கடற்பாலத்தின் வேலையை இங்கே கெடிலத்தின் கிளையாகிய உப்பனாறு செய்து விடுகிறது. உப்பனாற்றிலிருந்து படகுகள் நேரே கடலுக்குள் புகுந்து கப்பல்களை அடைகின்றன. எனவேதான் இஃது இயற்கைத் துறைமுகம் எனச் சொல்லப்படுகிறது. ஏற்றுமதி இறக்குமதிகள் உப்பனாற்றின் மேற்குக் கரையில் நடக்கின்றன.இந்தத் துறைமுகப் பகுதியில் உப்பனாறு வடக்கும் தெற்குமாக உள்ளது: பின்னர்த் தெற்கிலிருந்து கிழக்கு நோக்கி வளைந்து திரும்பிக் கடலை அடைகிறது. கடல்நீரின் ஏற்ற வற்றத்திற்கு ஏற்ப உப்பனாற்றின் நீர் மட்டம் பார்த்துப் படகுகள் விடப்படும். உப்பனாற்றங்கரையில் இருக்கும் கூடலூர்த் துறைமுகத்தைக் கீழுள்ள படத்தில் காணலாம்: