பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

கெடிலக்கரை நாகரிகம்



இதுதான் கூடலூர்த் துறைமுகத்தின் படம். இஃது, உப்பனாற்றின் மேற்குக் கரையில் நின்று கொண்டு எடுத்த படம். ஆற்றுக்கு அப்புறம் இருப்பது கிழக்குக்கரை. கிழக்குக் கரையில் ஒரு பெரிய தோப்பு தெரிவதைக் காணலாம். அந்தத் தோப்பில் மரங்கள் நீண்டு உயர்ந்திருப்பது தெரியும். ஆனால், அத்தனை மரங்களும் இலை தழை இல்லாத மொட்டை மரங்களே. இந்த மரங்களில் எப்போதுமே இலை தழைகள் இருப்பதில்லை. அப்படியென்றால் இஃது என்ன தோப்பு? இது தோணித் தோப்பு. அஃதாவது, தோப்பு ஒன்றுமில்லை; கிழக்குக் கரையில் நூற்றுக்கணக்கான தோணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்டு உயர்ந்து தெரியும் மரங்கள் எனப்படுபவை, தோணிகளின் நடுவே உள்ள பாய் மரங்களே. அந்தப் பாய் மரங்களின் எண்ணிக்கையைக் கொண்டு தோணிகளின் எண்ணிகையை அறியலாம். படத்தில் தோணிகள் தனித் தனியாகத் தெரியவில்லை. ஏதோ ஐந்து அல்லது பத்துத் தோணிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால் தோணிகளின் உருவம் தனித்தனியாகத் தெரியும். கணக்கற்ற தோணிகள் ஒன்றோடொன்று முட்டி மோதிக் கும்பலாய்க் குவிந்திருக்கும் இடத்தில் தனித்தனி உருவம் எப்படித் தெரியும்? இந்தக் காட்சியைக் கொண்டு, கூடலூர்த் துறைமுகத்தின் தகுதியை நாம் மதிப்பிட முடியும்.

படத்தில் நமது வலக்கைப் பக்கமாக அஃதாவது ஆற்றின் மேற்குக் கரையிலும் சில தோணிகள் நின்று கொண்டிருக்கக் காணலாம். அந்தத் தோணிகளில் சரக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் எடுத்தபோது, சேலம், ஹாஸ்பெட் ஆகிய இடங்களிலிருந்து புகைவண்டி வாயிலாக வந்த இரும்புக் கணிக் கற்கள் தோணிகளில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன. இவை, சப்பானுக்கும், ஐரோப்பாவிலுள்ள மேற்கு செர்மனி முதலிய நாடுகட்கும் அனுப்பப் படுகின்றனவாம். ஏற்றுமதி இறக்குமதி குறித்து வாணிகப் பிரிவில் பின்னர் விரிவாகக் காணலாம்.

இந்தத் துறைமுகப் பகுதியில் உப்பனாறு ஏறக்குறைய ‘முக்கால் பர்லாங்கு’ அகலம் உள்ளது. அதனால் தோணிகள் வசதியாக இயங்க முடிகிறது. கூடலூர்ப் புகைவண்டி சந்திப்பு நிலையத்திலிருந்து துறைமுகப் பகுதிக்குப் புகைவண்டிப் பாதைத் தொடர்பு இருக்கிறது. சரக்குகளைச் சுமந்து கொண்டுவரும் புகைவண்டிப் பெட்டி ஆற்றின் கரையிலேயே வந்து நிற்கும். புகைவண்டிப் பெட்டியிலிருந்து சரக்குகளை எளிதாகத் தோணியில் இறக்கலாம்; அதேபோல் தோணியி