பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

கெடிலக்கரை நாகரிகம்


கடற்கரையில் இல்லை; உள்ளே வெகு தொலைவு தள்ளி ஃஊக்ளி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற மூன்றும் வங்கக் கடற்கரையில் உள்ளன. தமிழ் நாட்டின் தூத்துக்குடித் துறைமுகத்தை, இந் நான்கிற்கும் அடுத்தபடியாகப் பெரிய துறைமுகங்கள் பட்டியலின் இறுதியில் சேர்க்கலாம். அஃதாவது, இஃது இரண்டாந்தரப் பெரிய துறைமுகமாகும். இந்தப் பெரிய துறைமுகங்கள் தவிர, ஒவ்வொரு மாநிலத்திலும் வங்கக் கடற்கரையில் சிறிய துறைமுகங்கள் சிற்சிலவும் உள்ளன. ஒரிசா மாநிலத்திலுள்ள “ஃபால்சு பாயின்ட் (Faise Point) துறைமுகமும் தர்மா துறைமுகமும், ஆந்திர மாநிலத்திலுள்ள காகிநாடா துறைமுகமும் மசூலிப்பட்டினம் துறைமுகமும், தமிழ் மாநிலத்திலுள்ள கூடலூர்த் துறைமுகமும், நாகப்பட்டினம் துறைமுகமும், புதுவை மாநிலத்திலுள்ள புதுச்சேரி துறைமுகமும் காரைக்கால் துறைமுகமும் சிறியவை. இந்தத் துறைமுகங்களுக்குள் புதுச்சேரியில் கடற் பாலம் வழியாகவும், மற்றவிடங்களில் ஆற்றங் கழி வழியாகவும் ஏற்றுமதி - இறக்குமதிகள் நடைபெறுகின்றன. இந்தச் சிறிய துறைமுகங் களுக்குள் மிகப் பெரியது கூடலூர்த் துறைமுகம். அஃதாவது, இந்தியாவின் கிழக்குக் கரையிலுள்ள சிறிய துறைமுகங் களுக்குள் பெரிய துறைமுகம் கூடலூர்த் துறைமுகமே.

பாடல் பெற்ற பழைய துறைமுகம்

தமிழ் மாநிலத்தில் தொண்டை நாட்டின் துறைமுகமாயிருந்த மாமல்ல (மகாபலி)புரமும், சோழ நாட்டின் துறைமுகமாயிருந்த காவிரிப்பூம் பட்டினமும், பாண்டி நாட்டின் துறைமுகமாயிருந்த கொற்கையும், சேரநாட்டின் துறைமுகமாயிருந்த முசிறியும், இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னமேயே சங்க இலக்கியங்களில் பழம் பெரு முது புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்டுள்ளன. அந்தோ! அந்தத் துறைமுகங்கள் இப்போது எங்கே? அனைத்துலக நாடுகளுடன் பெரு வாணிகம் புரிந்த அந்தப் பழம்பெருந் துறைமுகங்கள் இப்போது எங்கே? உலகின் பல நாட்டினரும் வந்து சூழ்ந்து மொய்த்துக் கொண்டிருந்த அந்த மாபெருந் துறைமுகங்கள் இப்போது எங்கே? அவற்றைப் பேணிக் காத்து வந்த தமிழரசர்கள் இப்போது எங்கே? அந்தோ தமிழகமே! நீ அளியை!

தமிழகத்தின் பழம் பெருந் துறைமுகங்கள் மறைந்து விடினும், நடு நாடு எனப்படும் திருமுனைப்பாடி நாட்டின் துறைமுகமாகிய பழைய கூடலூர்த் துறைமுகமாவது இன்னும் ‘கண்ணை மூஞ்சை ‘ காட்டிக்கொண்டிருப்பது ஒரு நற்பேறே!