பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

கெடிலக்கரை நாகரிகம்



இதற்கும் முன்பு கையாலேயே நாடாவைப்போட்டுக் கோத்து வாங்கி நெய்தார்கள்; அப்போது அதனைக் கைத்தறி என்றார்கள். பின்னர், கையாலேயே சுங்கு பிடித்து இழுத்து நாடாவைத் தானாகவே போய் வரும்படி செய்தார்கள்; இதற்கு விசைத்தறி என்னும் பெயர் கொடுக்கப்பட்டது; இப்போது இந்தக் கைவிசைத்தறியைத்தான் கைத்தறி என்கிறோம். மின்சாரத்தால் ஒடும் தறி விசைத்தறி எனப்படுகிறது.

ஒரு குடும்பத்தில் ஒருவர் ஆலையில் வேலை பார்க்கிறார் என்றால், ஆலை வேலை அவரோடு சரி, ஒருவர் அலுவலகத்தில் (ஆபிசில்) வேலை பார்க்கிறார் என்றால், அந்த வேலை அவரோடு சரி. ஆனால் நெசவுத்தொழில் அப்படிப்பட்டதன்று. ஒரு வீட்டில் ஒரு தறி ஆடுகிறதென்றால், அந்தக் குடும்பம் முழுதும் அதற்காக வேலை செய்ய வேண்டும். நூல் இழைத்தல், பாவு ஒடுதல், பாவு தோய்தல், பாவு பிணைத்தல், தார் சுற்றுதல் முதலிய பல்வேறு தொழில்கள் நெசவுக்கு முன் செய்யப்படுகின்றன. இத் தொழில்களில் பெண்களுக்கும் சிறுவருக்கும் பங்கு உண்டு. பெண்கள் - சிறுவர்கள் - கிழங்கட்டுகள் எல்லோருமாகச் சேர்ந்து சில்லறை வேலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தால்தான் ஆடவன் தறியில் அமர்ந்து நெய்து கொண்டிருக்க முடியும். ஒரு சில ஏழைக் குடும்பங்களில் பெண்களும் தறி நெய்கிறார்கள்.

செங்குந்தர், சேடர், சேணியர், தேவாங்கர், சாலியர் முதலிய இனத்தவர் நெசவு வேலை செய்கின்றனர். நெசவு இவர்களின் குலத்தொழிலாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பல்வேறு இனத்தவரும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவுத் தொழில் செய்யும் செங்குந்தர்கள் குழு குழுவாக வாழ்கின்றனர். அவர்கள் வாழும் ஊர்களில் அவர்களே பெரும்பான்மையினராயுள்ளனர். மேலும் இந்தத் தொழில் கூடிச் செய்ய வேண்டிய குடிசைத் தொழிலாகும். மானங்காக்கும் இந்தத் தொழிலில் எந்தவகைத் தீமையும் இல்லையாதலின் இதனைத் திருவள்ளுவர் செய்தார் என்று சொல்லப்படுகிறது. ‘செய்யுந் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்கின், நெய்யுந் தொழிற்கு நிகரில்லை’ என்னும் முதுமொழியும் உண்டு.

முன்காலத்தில் கைத்தறித் துணிகள் தறியின் மேலேயே விற்பனையானதுண்டு. இப்போது நெசவாளர்கள் துணிக்கடைகளில் கொண்டுபோய்க் கொடுத்தும் சந்தைகட்குக் கொண்டு போயும், தலை மூட்டையாக ஊர் ஊராகத் தெருத் தெருவாகச் சுற்றியும் துணிகளை விற்பனை செய்கிறார்கள். இஃதன்றிப் பெரிய துணி வணிகர்கள் நெசவாளர்களிடமிருந்து