பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

கெடிலக்கரை நாகரிகம்


வாயிலாக நடைபெற்ற சில ஏற்றுமதி - இறக்குமதிகள் இப்போது சென்னைத் துறைமுகத்தின் வாயிலாக நடைபெறுகின்றன. அவற்றுள் கைலி ஏற்றுமதி குறிப்பிடத்தக்கது. சென்னைத் துறைமுகத்தில் நெரிசல் மிகுந்து விட்டதாலும், அண்மையில் நெய்வேலி நிலக்கரித்திட்டம் நடைபெறுவதாலும் இப்போது மீண்டும் கெடிலக்கரைக் கூடலூர்த் துறைமுகம் சிறப்பிடம் பெறத் தொடங்கியுள்ளது.

இத்துறைமுகத்தில் முன்பு கைலி வகைகள், அச்சு குத்தின உடை வகைகள், மணிலாப்பயறு, மணிலா எண்ணெய், எள், இரும்பு, மட்பாண்ட வகைகள், கட்டடப் பொருள்கள் முதலியன ஏற்றுமதியாயின. தேக்கு, பாக்கு, பர்மா அரிசி, இந்தோனேசியாவிலிருந்து சர்க்கரை, இன்னும் பல நாடுகளிலிருந்து நூல், நிலக்கரி உரப்பிண்ணாக்கு வகைகள் முதலியவை இறக்குமதியாயின. மொத்தத்தில் ஏற்றுமதியை விட இறக்குமதியின் பெறுமானமே கூடுதலாக இருந்தது எனலாம்; எடுத்துக்காட்டாக, 1955 - 56ஆம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து கூடலூர்த் துறைமுகத்தில் வந்து இறங்கிய நிலக்கரி, உரப்பிண்ணாக்கு வகைகள் முதலியவற்றின் பெறுமானம் 95 இலட்சம் ரூபாயாகும்; அதே காலத்தில் இங்கிருந்து வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கட்டடப் பொருள்கள், பொறியியற் பொருள்கள், மட்பாண்ட வகைகள் முதலியவற்றின் பெறுமானம் 5 இலட்சம் ரூபாயேயாகும். 18 - 19 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிருந்து அச்சு குத்தின துணிகள் இலங்கை, பிலிப்பைன்சு முதலிய நாடுகட்குச் சென்றன; இந்த நூற்றாண்டில் நின்று விட்டன. இப்படி இங்கிருந்து முன்பு ஏற்றுமதியான பொருள்கள் சில இப்போது நின்றுவிட்டன.

இப்போது கூடலுர்த் துறைமுகத்திலிருந்து இரும்புத் தாதுக்கட்டிகள், சர்க்கரை, சாக்லெட் போன்ற இனிப்பு வகைகள், முந்திரிப்பருப்பு, ஆசிட், மட்பாண்ட வகைகள், மணிலாப் பொருள்கள் முதலியவை ஏற்றுமதியாகின்றன. இரும்புத் தாதுக்கட்டிகள், ஹாஸ்பெட், பெல்லாரி ஆகிய இடங்களிலிருந்து புகைவண்டி வாயிலாக வந்து, பின் இந்தத் துறைமுகத்தின் வாயிலாகச் சப்பான் நாட்டிற்கு ஏற்றுமதியாகின்றன. மேலை நாடுகளிலிருந்து புகைவண்டிக்கு வேண்டிய நிலக்கரி வந்து இறக்குமதியாகிறது. மேற்கு செர்மனி, பெல்ஜியம் முதலிய நாடுகளிலிருந்து உரவகைகள் வந்து இறங்குகின்றன. இன்னும் பல இடங்களிலிருந்து நூல் - துணிவகைகள், இரசாயனப் பொருள் வகைகள் முதலியவை வருகின்றன. இப்போது இத்துறைமுகத்தின் ஏற்றுமதி -