பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

287


கள்ளக்குறிச்சி வட்டம் தென்னார்க்காடு மாவட்டத்தின் மேடான மேற்குப் பகுதியில் இருத்தலானும் மலையுங்காடும் செறிந்திருத்தலானும், தென்னார்க்காடு மாவட்டத்து ஆறுகளுள் பெரும்பாலான இவ் வட்டத்தில்தான் தோன்றுகின்றன; அவை: கெடிலம், மணிமுத்தாறு, கோமுகி முதலியன.

கள்ளக்குறிச்சி வட்டம் மலைப் பகுதியாயிருத்தலானும் புகைவண்டிப் போக்குவரவு பெற்றிராமையானும், மற்ற வட்டங்களில் உள்ளாங்கு தொழில் - வாணிகப் பெருக்கம் இங்கில்லை. மலைவளமும் காட்டுவளமும் உள்ள இவ்வட்டத்தில், மலையூற்று ஒடும் பள்ளத்தாக்குகளில் நெல், கரும்பு, மணிலா முதலியவை விளைகின்றன. மேற்கேயுள்ள கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கும், மற்றப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கும் மிக்க வேறுபாடு உண்டு.

இனி, இவ் வட்டத்தில் கெடிலக்கரையை ஒட்டிய இன்றியமையாத இரண்டு ஊர்களைப் பற்றிய விவரங்களைக் காண்பாம்:

மையனூர்

‘கெடிலத்தின் தோற்றம்’ என்ற தலைப்பில் மையனுரைப் பற்றிய விவரங்கள் ஒரளவு கூறப்பட்டுள்ளன. அவ்வூருக்குத் தெற்கேயுள்ள மையனூர் மலையடிவாரத்துப் பாறைச் சுனையிலிருந்து கெடிலம் தோன்றி மையனூர் ஏரியில் கலந்து அங்கிருந்து ஆற்றுருவம் பெற்றுவருஞ் செய்தி முன்பு விளக்கப்பட்டுள்ளது.

மலையடிவாரத்துப் பள்ளத்தாக்கில் இருப்பதால் மையனூர் மிக்க வளம் பெற்றுத் திகழ்கிறது. நூறு அல்லது நூற்றிருபத்தைந்து வீடுகள் இச் சிற்றூரில் உள்ளன. இவ்வூர் வயல்கள் மிக்க வளமுடையவை. நெல், கரும்பு முதலியவை விளைவிக்கப் படுகின்றன. தங்கள் ஊர் வயல்களின் தரத்தைப் பற்றி மையனுர் மக்கள் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். கெடிலத் தாளைப் பெற்றளித்த மையனூர் நீடுழி வாழ்க!

ரிசிவந்தியம்

கள்ளக்குறிச்சி வட்டத்தில் கெடிலத்தின் நீளம் மிகக் குறைவு. கெடிலக் கரையை யொட்டியுள்ள இன்றியமையாத ஊர் இவ்வட்டத்தில் ரிசிவந்தியம் ஒன்றுதான். இவ்வூர்