பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

கெடிலக்கரை நாகரிகம்


கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவிலும் திருக்கோவலூர்க்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் கெடிலம் ஆற்றிற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலுமாக உள்ளது. வளர்ச்சிப் பணிகளுக்காகக் கள்ளக்குறிச்சி வட்டம் ஆறு ஊராட்சி மன்ற ஒன்றியங்களாகப் (பஞ்சாயத்து பூனியன்களாகப்) பகுக்கப்பட்டுள்ளது. அவ்வாறனுள் ரிசிவந்தியம் ஒன்றியமும் ஒன்றாகும். இந்த ஒன்றியத்தில் தான், கெடிலம் தோன்றும் மையனூர் உள்ளது. இந்த ஒன்றியத்தின் தலைநகர் ரிசிவந்தியம் ஆகும். திருக்கோவலூர் தியாக துருக்கம் மாவட்ட நெடும் பாதைக்கிடையே ரிசிவந்தியம் இருக்கிறது. 1760 ஆம் ஆண்டு இவ்வூர் ஆங்கிலேயர் கைக்கு மாறிற்று.

இவ்வூரில் ஆங்கிலேயரும் பிறரும் அடித்துப் பிடித்துப் போரிட்டுக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிக்கு அப்பால், இவ்வூர்க்குச் சிறந்த பெருமை யளிப்பது, இங்கே உமையொருபாகரின் (அர்த்த நாரீசுவரரின்) பழமையான கோயில் இருப்பதாகும். மதுரைத் திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோயிலில் சில சிறப்புகள் உள்ளன. கோயில் முதல் பெருவாயிலின் வலப்புறத்தில் சிற்ப வேலைப்பாடு மிக்க மண்டபம் உள்ளது. கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது தேனை ஊற்றினால், இறைவன் அதில் உமையொருபாகராய் வீற்றிருப்பது தெரியும். தட்டினால் பண் இசைக்கும் தூண்கள் இங்கே உள்ளன. இந்தக் கோயிலின் சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உண்டு; அஃதாவது, இங்கே உள்ள ஒரு யாளிச் சிலையின் திறந்த வாய்க்குள் ஒரு கல் உருண்டை உள்ளது; பந்து போன்ற அவ் வுருண்டையை நம் கைவிரலால் எப் பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம்; ஆனால், வெளியில் எடுக்க முடியாது; இது சிறந்த சிற்ப வேலைப்பாடாகும். இந்தக் கோயிலில் திருமலை நாயக்கரின் உருவச்சிலை யிருப்பது, வரலாற்றுக் குறிப்புக்கு உதவி செய்கிறது.

திருக்கோவலூர் வட்டம்

திருக்கோவலூர் வட்டம் தென்னார்க்காடு மாவட்டத்திற்கு நட்ட நடுவேயும் கெடிலம் ஒடும் வட்டங்களுக்குள் நடுவேயும் உள்ள வட்டமாகும். இதன் பரப்பளவு 1,500 சதுர கி.மீ., மக்கள் தொகை 4,00,150; தலைநகர் திருக்கோவலூர். இவ் வட்டம் ஆற்று வளமும் ஒரளவு மலைவளமும் காட்டுவளமும் உடையது. இஃது இப்போது ஐந்து ஊராட்சிமன்ற ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.