பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கெடிலக்கரை நாகரிகம்


அட்டவணையைக் கூர்ந்து நோக்குவோர்க்கு இன்றிய மையாத ஒர் உண்மை புலப்படும். அதற்காகவே இங்கே இந்த அட்டவணை கொடுக்கப்பட்டது. அட்டவணையின் முற்பகுதியில் உள்ள (தமிழ் நாட்டு ஆறுகள் அல்லாத) பதினான்கு உலக ஆறுகளைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். இந்தப் பதினான்கு ஆறுகளின் பெயர்களையும், அமேசான் முன்னதாகவும் கொலராடோ பின்னதாகவுமாக, இந்த வரிசையில் [1]அறிஞர்கள் அமைத்திருப்பது ஏன்? இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நீளத்தைக் கொண்டு மட்டும் ஆறுகளின் பெருமை சிறுமையைக் கணித்து விடக்கூடாது; மற்றத் தகுதிகளையும் நோக்கியே கணிக்க வேண்டும். பதினான்கனுள் முதலில் வைக்கப்பட்டுள்ள அமேசான் ஆறு 4000 கல் (6400கி. மீட்டர்) நீளம் உடையது. ஆனால், இதனினும் மிகுதியாய், முறையே 4240 கல் (6784 கி. மீட்டர்) நீளமும் 4160 கல் (6656 கி. மீட்டர்) நீளமும் உடைய மிசிசிப்பி ஆறும் நைல் ஆறும் முறையே ஐந்தாவதாகவும் பதின்மூன்றாவதாகவும் வைக்கப்பட்டிருப்பது ஏன்? இவ்விரண்டினும் நீளத்தால் சிறிய அமேசான் ஆற்றின் வடிநிலப்பரப்பு 2868 ஆயிரம் சதுர மைல். மிசிசிப்பியின் வடிநிலப் பரப்போ 1258 ஆயிரம் சதுர மைலே நைலின் வடிநிலப் பரப்போ 1120 ஆயிரம் சதுர மைலேதான். இதுமட்டுமா? அமேசான் ஆற்றின் சராசரி ஒழுக்கு 3800 ஆயிரம் க.அடி செக. மிசிசிப்பியின் சராசரி ஒழுக்கோ 700 ஆயிரம் க.அடி செக. தான். நைலின் சராசரி ஒழுக்கோ 56 ஆயிரம் க.அடி செக. அளவேதான். எனவேதான், நீளத்தால் குறைந்தாலும், வடிநிலப் பரப்பாலும் சராசரி ஒழுக்காலும் மிகுந்த அமேசான் முதல் இடத்தைப் பெற்றது. நீளத்தால் மிக்கிருந்தாலும், மற்ற இரண்டாலும் குறைந்த மிசிசிப்பி ஐந்தாம் இடத்தையும், நைல் பதின்மூன்றாம் இடத்தையும் பெற்றன. எனவே, நீளத்தின் மிகுதியைவிட, வடிநிலப்பரப்பின் மிகுதியும் சராசரி ஒழுக்கின் மிகுதியும் மிகவும் இன்றியமையாதவை என்பது தெளிவு.

வடிகால் பரப்பு, சராசரி ஒழுக்கு ஆகிய இரண்டுக்குள்ளும் சராசரி ஒழுக்கே மிகவும் இன்றியமையாதது. நீரோட்டம் இன்றி, ஆறு நீண்டும் வடிகால் பகுதி அகன்றும் இருந்து என்ன பயன்? இந்தப் பதினான்கு ஆறுகளுள், பிரம்மபுத்திராவையும் நைலையும் இங்கே எடுத்துக்கொள்வோம். பிரம்மபுத்திராவின் நீளம் 1970 மைல் (3152கி. மீட்டர்) தான். நைலின் நீளமோ 4160 மைலாகும். (6.656 கி. மீட்டர்). பிரம்மபுத்திராவின் வடிநிலப்


  1. தமிழ்க் கலைக்களஞ்சியம் - முதல் தொகுதி ! ஆறுகள் - பக்கம் 472.