பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

கெடிலக்கரை நாகரிகம்


இனி, பழைய குறுக்கைக் கூற்றமாகிய திருக்கோவலூர் வட்டத்தில் கெடிலக்கரையை ஒட்டியுள்ள இன்றியமையாத சில ஊர்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:

திருக்கோவலூர்

சங்க நூல்களில் கோவல் என வழங்கப்படும் திருக்கோலூர், அன்று மலையமான் மரபு மன்னர்கட்கும் மெய்ப்பொருள் வேந்தர் முதலியோர்க்கும் தலைநகராயிருந்ததன்றி, இன்று திருக்கோவலூர் வட்டத்திற்கும் திருக்கோவலூர் ஊராட்சிமன்ற ஒன்றியத்திற்கும் தலைநகராய்த் திகழ்கிறது. இவ்வூர், விழுப்புரம் காட்பாடி புகைவண்டிப்பாதை வழியிலும், கடலூர் - திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையிலும், விழுப்புரத்திற்கு மேற்கே 32 கி.மீ. தொலைவிலுமாக உள்ளது. ஊர், புகைவண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே 3 கி.மீ. தொலைவிலுள்ளது. இதன் மக்கள் தொகை 16,700 ஆகும்.

திருக்கோவலூர் தென் பெண்ணையாற்றங்கரையில் இருப்பினும், கெடிலம் ஒடும் நடுநாயக இடமான திருக்கோவலூர் வட்டத்தின் தலைநகராக இருப்பதாலும், கெடிலம் ஆற்றுக்கு வடக்கே 8 கி.மீ. (5.மைல்) தொலைவிற்குள் இருப்பதாலும், ‘கெடிலக்கரை நாகரிகம்’ என்னும் இந்நூலில் சிறப்பிடம் பெறுவதற்குரிய முழுத்தகுதியும் உடையதாகும்.

ஒளவையார் பாரிமகளிரைத் திருக்கோவலூர் மன்னர்க்கு மணமுடித்த வரலாறும், பாரியின் பிரிவாற்றாது கபிலர் வடக்கிருந்து தீப்பாய்ந்து உயிர் விட்ட ‘கபிலர் குன்று’ என்னும் பாறை திருக்கோவலூருக்கு அருகில் இருப்பதும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளாரின் தலைமையகமும் அவர்களால் உருவாக்கப்பட்ட கோவல் தமிழ்ச்சங்கமும் திருக்கோவலூரில் இருப்பதும் அவ்வூர்ப் பெருமைக்குத் தக்க சான்றுகளாம். வரலாற்றுப் பெருமைக்கு உரியதான இச்சிறு நகர் மேலூர், கீழுர் (கீழையூர்) என்னும் இரு பிரிவினதாயுள்ளது. இங்கே, ஒரு வட்டத்தின் (தாலுகாவின்) தலைநகரில் இருக்க வேண்டிய இன்றியமையா அலுவலகங்கள் அனைத்தும் உள்ளன.

மேலூர்

திருக்கோவலூரில் மேற்குப்பகுதி மேலுாராகும். இதுதான் நகரத்தின் இன்றியமையாப் பகுதி. இங்கே தான் திருவிக்கிரமப் பெருமாள் கோயில், கடைத்தெரு, உயர் நிலைப்பள்ளி முதலியவை உள்ளன. இங்கே உள்ள திருவிக்கிரமப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; முதலாழ்வார் மூவரும்